பக்கம் எண் :

பாட்டியல் - நூற்பா எண் 140   

317


 

பிணிப்பிலிருந்து நீங்கவும் இறைவன் அருள் வேண்டும். அத்தகைய அருள்
கிடைக்கப்பட்டுப் பிணிப்பிலிருந்து நீங்கியவன் சீவன் முத்தனாவான். அவன்
உலகியற் பொருளை விடுத்துத் தன்னை அறியும் மேம்பட்ட ஞானத்தன்ஆவான். அவன் தன்னலம் கருதாது உலக நலன் கருதிச்
செய்வதே முதல் நூலாம்.

 

     இறைவன் அருளால் யோக நிலை உண்டாகும். யோகநிலை என்பது
இறைவனை உள்ளத்திருத்தி அவனோடு இரண்டறக் கலந்து துய்த்து
இருப்பது. அந்நிலை கைகூடப் பெற்றவர்களுக்கு ‘நில்லாதனவற்றை
நிலையின என்றுணரும் புல்லறிவாண்மை’ - (குறள்) நீங்கும். அந்நிலை
ஏற்பட்டபின் தான் அல்லாத உடலைத் தான் என்றும் தனது அல்லாத
உலகியல் பொருளைத் தன்னுடையது என்றும் கருதும் ‘யான் எனது என்னும் செருக்கு’ -(குறள் 346) அவனால் அறுக்கப்படும். அச்செருக்கு நீங்கியபின்
நல்வினைதீவினை என்பனவற்றை ஒன்றுபோலக் கருதும் உளநிலை ஏற்படும்.
அந்நிலையை எய்தியவன் மேம்பட்ட பொருளிடத்து நாட்டத்தைச்
செலுத்துவான். அப்பொழுது இறைவன் அருள் கைகூடும். அவ்வருளினால்
மெய்ஞ்ஞானம் ஏற்படும். அஃது உலக நலனுக்கும் பயன்படும். ‘நிலமமர்
வையத்து ஒருதாம் ஆகி, உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும்
பெரியோர்’- (மதுரை. 470 - 471) முன்னோனாகிய இறைவனைப் போலவே
நமக்குக் காட்சி வழங்குதலின் அவர்களை முனைவன் என்றே கூறுவது
உபசார வழக்கு. அவர்கள் உலக மக்கள் வாழ்வதற்காக அருள் காரணத்தான்
நூல் இயற்றுவார்கள் என்பது.
 

     இறைவன் அருளால் அறிவு விளங்கும் என்பதனை மணிவாசகப்
பெருமானும் நம்மாழ்வாரும் குறிப்பிட்டருளியுள்ளனர். இந்நூற்பா உரை மிகச்
சிறப்பாக உள்ளமை பாராட்டத்தக்கது. இந்நூற்பாவுக்குத் தொல்காப்பிய
உரையாளர்களும் நன்னூல் உரையாளர்களும் உரைத்துள்ள உரைகளுடன்
இதனை ஒப்பிட்டுக் காண்க.