பக்கம் எண் :

314

மூன்றாவது உயிர்ஈற்றுப் புணரியல்

புணர்ச்சி இன்னதென்பது

53. மெய்உயிர் முதல்ஈறு ஆம்இரு பதங்களும்
தம்மொடும் பிறவொடும் அல்வழி வேற்றுமைப்
பொருளில் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே.

என்பது சூத்திரம்.

நிறுத்த முறையானே பதங்கள் தம்மொடும் உருபொடும் புணருமாறு கூறுவான புகுந்தவற்றுள், இவ்வோத்து உயிர் ஈற்றுப்பதம் நின்று வருமொழி வன்கணத்தொடும் சிறுபான்மை ஏனைக் கணங்களொடும் புணருமாறு உணர்த்தினமையின் உயிர் ஈற்றுப் புணரியல் என்னும் பெயர்த்து.

பொதுவகையான் புணரும் இயல்பும், விரிந்த சூத்திரப் பொருள் அன்றித் தொக்குப் புணரும் இயல்பும் குற்றுகர ஈற்றுச் சொற்கள் நின்று புணரும் இயல்பும் உணர்த்துதலொடு இயைபு நீக்காது, தன்னொடு இயைபின்மை மாத்திரை நீக்கித் தலைமை பற்றி வந்து அடுத்த ‘உயிர் ஈறுபுணர்தல்’ என்னும் விசேடத்தான் விசேடிக்கப்படுதலின் இக்குறி தலைமைபற்றிய வழக்கு, ஆதீண்டு குற்றிபோல.

மேல் பதங்கள் ஆமாறு உணர்த்தி, ஈண்டு அவை தம்முள் புணருமாறு உணர்த்தினமையின், மேல் ஒத்தினொடு இயைபு உடைத்தாயிற்று இதனுள் இத்தலைச் சூத்திரம் பொதுவகையான் புணருமாறு கூறுகின்றது.

இ-ள்; மெய்முதலாயும் உயிர்முதலாயும் மெய் ஈறாயும் உயிர்ஈறாயும் உள்ள பகாப்பதங்களும் பகுபதங்களும் தம்மொடு தாம் வந்தும் பிறவற்றொடு வந்தும், அல்வழிப் பொருளினான் ஆதல் வேற்றுமைப் பொருளி