627 ஐந்தாவது-உருபு புணரியல் உருபு புணரும் முறைமை 147 உருபினும் பொருள் முடிபு ஒக்கும்மன் பயின்றே. என்பது சூத்திரம். பதங்களொடு உருபு புணரும் இயல்பு உணர்த்தினமையின் இவ்வோத்து உருபுபுணரியல் என்னும் பெயர்த்து. மேல்பதத்தொடு பதம் புணருமாறு உணர்த்தி ஈண்டு அதனொடு உருபு புணருமாறு உணர்த்தலின் மேல் ஓத்தினொடு இயைபு உடைத்து ஆயிற்று. இதனுள் இத்தலைச் சூத்திரம் உருபு புணரும் முறைமை மாட்டெறிந்து உணர்த்துகின்றது. (இ-ள்.) உயிரும் ஒற்றும் முதலாகிய வேற்றுமை உருபுகள் மேல் கூறியவாற்றான் உயர்திணைப்பெயர் முதலிய எல்லாப்பெயர்க்கும் பின்னாக வந்து புணரும் புணர்ச்சிக்கண்ணும் முற்கூறிப்போந்த வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபினை ஒத்துப்பெரும்பாலும் முடியும் என்றவாறு. வரலாறு: நம்பியை-நம்பியொடு-நம்பியின்- நம்பியது எனவும், கிளியை-கிளியொடு-கிளியின்-கிளியது எனவும் சாத்தியை-சாத்தியொடு-சாத்தியின்-சாத்தியது-எனவும் நம்பிக்கு-நம்பிகண் எனவும் கிளிக்கு-கிளிகண் எனவும் சாத்திக்கு-சாத்திகண் எனவும் |