இது வினையின் பெயர்க்கு எய்தியது இகந்து படாமை காத்தலும், வினையால் அணையும்பெயர்க்கு எய்தியது விளக்கலும் நுதலிற்று. இ-ள் வினையினது பெயரே படர்க்கை இடத்திற்கு உரித்தாம். வினையான் பிறிது ஒன்றற்கு எய்திய பெயர் மூன்று இடத்திற்கும் உரித்தாம் என்றவாறு. வரலாறு: உணல்- தினல்- செலவு- வரவு என்றாற் போல்வன வினையின் பெயராய், அவ்வப் புடைபெயர்ச்சி உணர்த்திப் படர்க்கைக்கு உரியவாய் நின்றன. பூசல் வேட்டை- கூத்து என்றாற்போல்வன வினையின் பெயராய்ப் புடைபெயர்ச்சி உணர்த்தாது நின்றன. இவையும் அன்ன. வந்தான்- வந்தாள்- வந்தேன்- வந்தேம்- வந்தாய்- வந்தீர் என்றாற்போல்வன வினையால் அணையும்பெயராய்ப் பிறது பொருள் உணர்த்தி மூன்று இடத்திற்கும் உரியவா நின்றன. இவை பெயர் ஆயின பொழுது உருபு ஏற்றலும், வினை ஆயின பொழுது பெயர்கொண்டு முடிதலும் தம்முள் வேறுபாடு என்று உணர்க. வந்தவன் சென்றவன் என்றாற் போல்வனவும வினையால் அணையும்பெயரேயாம். பிறவும் அன்ன. |