சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

22 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கும் மக்கட்டன்மையைக் குறித்து மக்கள் இவர் என்னும் பொதுப் பொருண்மை
உயர்திணை ஆவது என்பது அறிவித்தற்குச் சுட்டு’ என்றார்.’

நன்னூல் விருத்தி யுரைகாரர்- ‘மக்கட்சுட்டு என்னும் இருபெயர்ஒட்டு
ஆகுபெயருள் மக்களாகிய அடை சுட்டு என்னும் இயற்பெயர்ப் பொருளை விசேடித்து
நில்லாது பொருளாகிய ஆகுபெயர்ப்பொருளை விசேடித்து நிற்பச் சுட்டு என்பதே
ஆகுபெயர்ப்பொருளை உணர்த்த இருபெயரும் ஒட்டி நிற்கும் ஆதலின்,
இருபெயரொட்டாகுபெயர் இரு மொழிக்கண் வந்தது அன்று; அக்கருத்தேபற்றி மக்கள்
சுட்டு என்பதனைப் பின்மொழி ஆகுபெயர் என்பாரும் உளர்.’ (நன். 290)

இலக்கணக்கொத்துடையார் ‘மக்கட்சுட்டு, பழங்கறி பழம்புளி என்புழிப்
பண்புத்தொகை பின்மொழி ஆகுபெயர் ஆகியவாறு.’ (இ.கொ.98 உரை) பிரயோக
விவேக முடையார்- ‘ஆண்டகை, பெண்டகை, மக்கட்சுட்டு இன் பின்மொழி
ஆகுபெயராய் நின்ற இரு பெயரொட்டுப் பண்புத் தொகை என்பர்; மக்கட்சுட்டு
என்பதனைக் கல்லாடரும் பின்மொழி ஆகுபெயராய் நின்ற இருபெயர்ஒட்டுப்
பண்புத்தொகை என்பர். அதனைச் சேனாவரையர் அன்மொழித் தொகை என்பர்.
நச்சினார்க்கினியர் ஆகுபெயர் என்பர். இவ் விரண்டும் இருமொழிமேலும் அன்றி வேறு
ஒரு மொழியே நில்லாமையின் அவ்வுரை பொருந்தாமை அறிக.’ (பி.வி. 2 - உரை)

எனவே பிரயோக விவேக நூலார் சுட்டு என்பது சுட்டப்படுவதனை இயல்பாகக்
குறிக்க, மக்கட்சுட்டு மக்களாகச் சுட்டப்படுவது என்னும் பொருட்டாய் இருபெயரொட்டுப்
பண்புத்தொகை என்ற கருத்தினர் ஆவர்.