சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

256 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஆண்டுக் கூறுதற்கு ஓர் இடம் இன்மையானும், தொகை விரியுங்கால் படும் இலக்கணம்
ஆதலானும், தொடர்மொழி இலக்கணத்தொடு பொருந்த வேற்றுமையியல் இறுதிக்கண்
இதனை ஆசிரியர் அமைத்தமையானே சேனாவரையர் நச்சினார்க்கினியர் தரும்
உரையே பொருத்தமுடைத்தாதல் காண்க. அவற்றை ஒட்டி இவ்வாசிரியர்
இந்நூற்பாவிற்குக்கூறிய உரையும் பொருத்தமுடைத்தாதல் அறிக.
 

ஒத்த நூற்பா
 

226. வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலம் கருவி என்றா
இன்னதற்கு இதுபயன் ஆக என்னும்
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ
ஆயெட்டு என்ப தொழில்முதல் நிலையே
 

அவைதாம்,
                    வழங்கியல் மருங்கின் குன்றுவ குன்றும்.
                    இது தொழிற்கு முன்நிற்கும் காரணங்கள் இத்துணை என்று உணர்த்திய
முகத்தான், மேல் கூறிப் போந்த வேற்றுமைப் பொருள்களை ஈண்டுத் தொகுத்துக்
கூறுகின்றது.

இ-ள்: வினையும் வினைமுதலும் செயப்படு பொருளும் நிலமும் காலமும்
கருவியும் ஆகிய ஆறும், இன்னதற்காக இதுபயனாக என்று சொல்லப்படும்
இரண்டொடும் தொக்குத் தொழிலது முதல்நிலை எட்டாம் என்றும், அவைதாம் எல்லாத்
தொழிற்கும் எட்டும் வரும் என்னும் யாப்புறவு இல்லை, வழங்கின்கண் குன்றத்தகுவன
குன்றி வரும் என்றும் சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.