இது முற்கூறிப் போந்த மூவகை வினைச் சொல்லுள் முற்றுவினைச்சொற்கு இலக்கணம் கூறுகின்றது. இ-ள் பிறிது ஒரு சொல்லொடு இயையாது தாமே தொடர்ஆதற்கு ஏற்கும் இயல்பை உடையனவாய், முற்கூறிப் போந்த வேற்றுமை கொள்ளாமை முதலிய பொது இலக்கணங்களை ஏற்று நிற்றலே அன்றி, மேற் கூறக்கடவ திணை பால் இடங்கள் முழுதையும் விளக்கிக் குறைவுபடாது நிற்பன முற்றும் இயல்பை உடைய முற்றுவினைச் சொற்களாம்; அத்தன்மைய ஆகிய முற்றுவினைச் சொற்கள்தாம் எவ்வாற்றானும் பெயரொடு முடியும் என்றவாறு. எ-டு: வந்தான் வழுதி, கரியன்மால்- எனவரும். இனி ‘எத்திறத்தானும்’ என்றதனானே, ‘கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்’ (இறை கள.1) என வெளிப்பட்டு வரினும், ‘அகரமுதல-னகரஇறுவாய், முப்பஃது என்ப’ (தொல்.1) என வெளிப்படாது வரினும் பெயர் முடிபாம் எனக் கொள்க. ‘எவ்வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி’ (198) என்றதனானே வெளிப்படாது நிற்றலும் பெறப்பட்டமையின் ஈண்டுக்கூறல் வேண்டாஎனின், ஆண்டு முடிக்கப்படும் பெயர் வெளிப்படாது நிற்றலும் உடைத்து என்றார்; இது முடிக்கும் பெயர் ஆதலின் ஆண்டு அடங்காது என்பது. அஃதேல் முற்றுச்சொல் ஆவது மற்றுச்சொல் நோக்காமை ஆகலின், முற்றிற்றேல் அதுபெயர் அவாய்நில்லாது; |