குறிப்புமுற்றுக்கள் பெயரெச்சமாகப் பொருள் படுங்கால் ஆகிய என்பதனைச் சேர்த்துப் பொருள் செய்க. தானையர் முதலிய சொற்கள் குறிப்பு வினைமுற்றாகிய வழியே பெயரெச்சமாம் எனவும், குறிப்பு வினையால் அணையும் பெயராகியவழி வரும் பெயரொடு சேர்ந்து இருபெயரொட்டுப்பண்புத்தொகையாம் எனவும் உணர்க. எச்சமே முற்றாம் என்பார் பலர். அவருள் தலையாயவர் நச்சினார்க்கினியர். வினையெச்சமும் பெயரெச்சமும் இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் உரிய பொதுவினை. இவை ஈற்றான் திணையும் பாலும் இடமும் உணர்த்தும் சிறப்புவினையாய் அமைதலின், இவை முற்றுக்களின் திரிபாகிய எச்சங்கள் என்பதே ஏற்புடைத்து. இவை வினைமுற்றாமேனும், வேறு வினைகொண்டே பொருள் முடியும் நிலையினவாய் இருத்தலின் வினையெச்சமாயின. வினைகொண்டு முடிதல் என்ற ஒரே காரணத்தான் ஒருகால் வினையெச்சமாகும் எனின், வினைகொண்டு முடியும் மார் ஈற்று முற்றும், வினைகொண்டு முடியும் வேற்றுமை உருபு ஏற்ற சொற்களும் வினையெச்சமாகிவிடும் ஆதலின் அது நேரிய காரணம் அன்று. எச்சம் முற்றாய்த்திரியும் எனின், கண்ணியன் வில்லன் முதலிய குறிப்பு முற்றுக்கள் எவ்வெவ்வெச்சங்கள் திரிந்து உண்டாயின என்பதனைக் குறிப்பிடுதல் இயலாததாகிறது. ஆதலின் முற்று எச்சமாயிற்று எனலே நேரிது. இக்கருத்தே சேனாவரையர் பரிமேலழகர் முதலாயினாருக்கும் உடன் பாடாகும், |