சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

384 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

முற்றாய்த்திரிந்ததாயின் இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாய் நில்லாது
முற்றுச் சொற்கு ஓதிய ஈற்றுவாய் இருதிணை ஐம்பால் மூவிடம் உணர்த்துமாறு என்னை
எனின், அற்று ஆதலின் அன்றே திரிந்தது எனப்பட்டது என்க. கண்ணியன் வில்லினன்
எனவரும் வினைக்குறிப்பு முற்றாதற்கு ஏற்பதோர் எச்சம் இன்றால் எனின், நன்று
சொன்னாய். வினைக்குறிப்பு முற்றெச்சமாய் திரியும் என்றாரை அங்ஙனம் எச்சமாய்த்
திரிந்த வாய்பாடு யாது எனக்கடாயினார்க்கு விடை யாதோ என்க.
 

அமைதி
 

முற்றே எச்சமாய்த்திரியும் என்பது சேனாவரையர் முதலாயினார் கருத்து. அதுவே
இவ்வாசிரியருடைய கருத்தும் ஆகும். நன்னூலாரும் முற்றே எச்சமாய்த் திரிந்தது என்பர்
அதற்கே முனிவர் நன்னூலில் விளக்கம் தருவர். எச்சமே முற்றாயிற்று என்பது
நச்சினார்க்கினியர் கருத்து. இருவகை யினருக்கும் சான்றுகள் உள. இருவர் மதமும்
மறுக்கப்படா. இதனை இலக்கணக்கொத்துள்ளும் காண்க. இவ்வாசிரியரை மறுக்க முனிவர்
மதம் மாறியது பெருவிந்தையாம்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

    முழுதும்

‘தொழிற்பெயர் வினைமுதல் செயப்படு பொருளே
கருவி இடம்பெய ரெச்சமுற் றாதலும்
இருவகை முற்றும் ஈரெச்ச மாகலும்
இருவகை எச்சமும் முற்றே ஆகலும்
உளஎன மொழிப ஒரோவழிப் புலவர்.’
 
நன். 351





இ.கொ.82

வினையியல் - உரை விளக்கம்
முற்றும்.