சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

392 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இவ்வேழனோடு குறிப்பு என்ற ஒன்றனையும் கூட்டி இடைச்சொல் எட்டு என்றார்
நன்னூலார். குறிப்பு என்பது ‘தத்தம் பொருள’ என்பதனுள் அடங்கும், நன்னூலாரும்
தத்தம் பொருளவாகிய இடைச்சொற்களுள் ஒன்றான ‘என’ என்பதன் பொருளை
விளக்குமிடத்து ‘வினைபெயர் குறித்து இசை எண் பண்பு ஆறினும்-என என்
மொழிவரும்’ (2) எனக் குறிப்புப் பொருண்மையையும் ‘தத்தம் பொருள’ என்பதனுள்
அடக்கினார் ஆதலின், இடைச்சொல்வகை எட்டு என்றல் ஏற்றதன்று என்றார்
இவ்வாசிரியர்.

“இடைச்சொற்கள் பெயர்வினைகளும் ஆகாது அவற்றின் வேறும் ஆகாது
இடைநிகரனவாய் நிற்றலின் இடைச்சொல் எனக் காரணக்குறிபெற்றன. தனித்துநடத்தல்
இன்றிப்பெயர் வினைகள் இடமாக நடத்தலின் இடைச்சொல் எனக் காரணக்குறி போந்தது
எனினும் அமையும்” என்பது நன்னூல் விருத்தி-420.

நன்னூலார் பெயரியல் வினையியல்களை அடுத்துப்பொதுவியல் கூறிப்பின்னர்
இடையியல் உரியியல்களை அமைத்தார். இவர் தொல்காப்பியனார் மரபை ஒட்டிப் பெயர்
வினை இடை உரி பற்றிய இயல்களை அமைத்துப் பொதுவியலை இறுதிக் கண் வைத்தார்.

இனி, இடைச்சொல் இலக்கணம் பற்றித் தெய்வச்சிலையார், ‘பெயரும் வினையும்
இடமாக நின்று பொருள் உணர்த்தலின் இடைச்சொல்லாயிற்று; பொருள் உணர்த்தும்
வழிப் பெயர்ப் பொருண்மை உணர்த்தியும். வினைப் பொருண்மை உணர்த்தியும்
வருவதல்லது வேறு பொருள் இல என்றுமாம்’ தொல்.சொல். 245 என்றார்.

பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச்சார்ந்து நின்று அவற்றை
வெளிப்படுப்பதல்லது தமக்கெனப் பொருள் உடைய அல்ல என்பது இடைச்சொல்
இலக்கணம் என்பார் சேனாவரையர். தொல்.சொல். 249