‘நின்னை ஈங்குப் பெற்றேன் என் எனக்கு அரியது’ என்று முன்நின்ற தம்பியை நோக்கிக் கூறவேண்டும் இடத்து நின்னை என்னும் முன்னிலைக்கண் ‘எம்பியை’ என்ற படர்க்கைச் சொல் பெய்தது முன்னிலைப் படர்க்கை மயக்கம் ஆகிய வழுவமைதியாம். ‘யான் அங்ஙனம் சொல்லப்படுவேனோ’ என்று கூறு வேண்டிய இடத்து ‘அங்ஙனம்..........தந்தை, அங்ஙனம்.................தாய்’ என்று கூறுவன தம்மைப் பிறர்போல் கூறும் குறிப்பாகும். முன்னிலையையும் படர்க்கையையும் எண்ணிப் படர்க்கை வினை கொடுத்தலும், தன்மையையும் படர்க்கையையும் எண்ணிப் படர்க்கை வினை கொடுத்தலும், தன்மையையும் முன்னிலையையும் எண்ணிப் படர்க்கை வினை கொடுத்தலும், மூவிடங்களையும் எண்ணிப் படர்க்கை வினை கொடுத்தலும் போல்வனவும் வழுவமைதியாம். இவையாவும் மயிலைநாதர் தந்த எடுத்துக்காட்டுகளாம். நன்.மயிலை.379 |