இதுவும் ஒரு மரபு வழுக்காக்கின்றது; ஒரு தொடர் ஒரு பொருள் உணர்த்தி அமையாது வேறு ஒரு பொருளும் குறித்து நிற்றல் வழு ஆயினும், அமைக்க என்றலின். இ-ள்: இனமாகிய பல பொருட்கண் ஒன்றனை வாங்கிக் கூறிய வழி, அச்சொல் தன் பொருட்கு இனமாகிய பிற பொருளைக் குறிப்பான் உணர்த்தலும், உம்மையான் உணர்த்தாமையும் உரித்து என்றவாறு. வரலாறு: அறஞ் செய்தான் துறக்கம் புகும்- இழிவு அறிந்து உண்பான் இன்பம் எய்தும்- எனவரும். இவை சொல்லுவார்க்கு இனப் பொருள் இயல்பு உரைக்கும் குறிப்பு உள்வழி, மறம் செய்தான் துறக்கம் புகான்- கழிபேர் இரையான் இன்பம் எய்தான்- என இனம் செப்புதலும், அக்குறிப்பு இல்வழி இனம் செப்பாமையும் காண்க. எடுத்த பொருளை உணர்த்தும் மொழியை ‘எடுத்த மொழி’ என்றும், இனன்அல்பொருளின் நீக்குதற்கு ‘இனம்’ என்றும் கூறினார். |