சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

660 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘குணம் நுதலி வரூஉம் கிளவி’- குணம்- சினை; நுதலி சினைவினை. கிளவி-முதல்;
வரூஉம்- முதல்வினை; நுதலி என்ற சினைவினை வரூஉம் என்ற முதல்வினைகொண்டு
முடிகிறது. செந்தாமரை என்ற தொகையில் செம்மை என்ற பண்புச்சொல் அப்பண்பு
உடைய தாமரை என்பதனை விசேடித்து இரண்டும் ஒருசொல்நிலைய ஆதல்
அத்தொகையின் இயல்பு என்பதாம். பண்புப் பகுதியைத் தனியேகொள்ளின் பொருள்
தாராது என்பதாம்.

மெல்லிலை முதலியன வண்ணம் முதலிய நால்வகையுள் அடங்காத ஏனைய பண்பு
பற்றிய தொகைகளாம்.

கருங்குதிரை என்புழிக் கருமை ஏனைய நிறக் குதிரைகளையும் குதிரை ஏனைய
பொருட்கண் அமையும் கருமையையும் நீக்குதலே ஒன்றனை ஒன்று பொதுமை
நீக்குதலாம்.

பிரியாத்தொகையாகிய நித்யசமாசன்கள் பிற சொல் கொணர்ந்தே விரிக்கப்படும்
என்ற கருத்துப்பற்றிக் கருங்குதிரை முதலியன கரியதாகிய குதிரை முதலாக
விரிக்கப்படுதல் காண்க.

சாரைப்பாம்பு என்பதில் சாரை என்பதும் பெயர், பாம்பு என்பதும் பெயர். இவ்விரு
சொற்களும் ஒரே பொருள் மேல் தொக்குப் பண்புத்தொகை போல விரிக்கப்படுதலின்
சாரைப்பாம்பு என்பது இருபெயர் ஒட்டுப்பண்புத் தொகையாம்.

பண்புத்தொகையில் நிலைமொழி விசேடிக்கும் சொல்; வருமொழி
விசேடிக்கப்படும்சொல். நிலைமொழி ஆகிய விசேடிக்கும் சொல் விசேடியாது இருப்பின்
குற்றமாம். வருமொழி ஆகிய விசேடிக்கப்படும் சொல் விசேடிப்பதும் உண்டு;
விசேடியாமையும் உண்டு. சாரைப்பாம்பு என்ற தொடரில் சாரை விசேடிக்கும் சொல்.
பாம்பு விசேடிக்கப்படும் சொல். இவை தம் பண்பு தவறாது இருப்பது காண்க.