அவை, ‘யாற்றுள் செத்த எருமையை இழுத்தல் இவ்வூர்க் குயவர்க்கு என்றும் கடனே’
என்றது முதலாயின. குயவன் சுள்ளையின் எழுந்த புகையான் ஆகிய மேகம் தந்த நீரான் எருமை சாதலின் குயவர்க்கு இழுத்தல் கடனாயிற்று என்க. ஒருகாரணம் உள்ளது போலக் கூறுகின்றது உண்மைப்பொருளன்றி ஒருவன் இயைபு இன்றிக் கூறிய சொற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுதலின் இயையாதன இயைந்தனவாய் வருதலாயிற்று.மெய்ந்நிலை மயக்கின் ஆஅகுநவும் என்பது பொருள் மயக்காகிய பிரேளிகைச் செய்யுட்கண் திணைமுதலாயின திரிந்து வருவனவும் என்றவாறு.
அவை, ‘எழுதுவரிக் கோலத்தார் ஈவார்க்கு உரியார் தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார்- முழுதகலா நாணின் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற்கு அமைந்தார் பெரிது’ என்பது முதலாயினவாம். இச்செய்யுட்கண் புத்தகம் என்னும் பொருள்மேல் திணைதிரிந்தவாறு காண்க. பிறவும் அன்ன. பிரேளிகை எனினும் பிசி எனினும் ஒக்கும். மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும் என்பது மந்திரத்தை உடைய தெய்வங்கள் இடத்தே அதற்கு உரிய அல்லாத சொற்களாய் வருவனவும் என்றவாறு. இதற்கு உதாரணம் மந்திரநூல் வல்லார்வாய்க் கேட்டு உணர்க. அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே என்பது ஆகிய அவ்வனைத்தும் வழங்கியவாறே கொள்வதல்லது இலக்கணத்தான் யாப்புறவு உடைய அல்ல என்றவாறு. |