‘முற்கூறிப்போந்த’ என்றது, 227, 228 ஆம்நூற்பாக்களை உட்கொண்டு என்றவாறு. வினைச்சொல் முற்று, பெயரெச்சம், வினையெச்சம் என்று மூவகைப்பட்டுச் சிறப்பாகவும் பொதுவாகவும்வரும் என்பது உணர்த்தப்பட்டது. முற்று- தானே முடிந்து நிற்பது; எச்சம்-பொருள் முடிந்து நிற்கப் பிறிதொன்றனை அவாவி நிற்பது. முற்ற நிற்றலான், முற்று; ‘மற்று........மொழியே’ என்றார் அகத்தியனார்’ (நன்.322. மயிலை) முற்றுச்சொல் விகுதியால் எழுவாயையும் பெரும்பாலும் குறிப்பிட்டு விடுவதால் அதன்கண் பொருள் நிரம்பிவிடும். அத்தகையநிலை எச்சங்களுக்கு இன்மையின் அவை பொருள் நிரம்ப வேற்றுச்சொல்லை அலாவியே வரல் வேண்டும் என்பது. முற்றுச்சொல் பற்றிய விளக்கம் சேனாவரையர் ‘அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி’ தொல்.சொல்.215 என்ற நூற்பாஉரையுள் கூறியதேயாம். முற்றுச்சொல் தானே தன் தொடர்ப்பொருள் உணர்த்தல் ஆற்றாது நின்று தன்னை வினைமுதல் வந்து விளக்கத்தன் தொடர்ப்பொருள் உணர்த்தி எடுத்தல் ஓசையரன் மற்றொரு சொல் நோக்காது செப்பு மூயினாற்போல அமைந்து நிற்கும் இலக்கணத்தது என்பர் நச்சினார்க்கினியர். (தொல்.சொல்.236) |