பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-17337

நச்சினார்க்கினியர் நோய்தீர்தற்குக் காரணமாகிய மருந்து என வரும் காரணத்தைக்
கருவிக்கண்ணும், நின் முகத்தைக்காண்டல் காரணமாக அதன்காரியமாகப்பிறந்த அருளை
மருந்தாதல் தன்மையாக உடைமை எனவரும் காரியத்தை ஒன்றென முடித்தற் கண்ணும்
அமைத்துக்கொள்க என்பர். (தொல்.சொல்.236)

பொச்சாவாக்கருவி என்பது பொச்சாவாச் செயலை உடைய மனம் எனப் பொருள்
படுதலின் வினைக்கண் அடங்கும் என்பது சேனாவரையர் கருத்து; கருவிக்கண்
அடங்குதல் நச்சினார்க்கினியர், பரிமேலழகர் இவர்களது கருத்தாகும்.

ஆறு சென்றவியர்- ஆறு சேறலாகிய காரணத்தான் வந்த காரியமாகிய வியர்.
உண்டசோறு என்பதனைச் சோறு உண்ணப்பட்டது என்று அமைக்கலாம்; ஆனால்
சென்ற வியர் என்பதனை வியர் சொல்லப்பட்டது என்று அமைத்தல் இயலாது; ஆதலின்
வியர் என்பதனை நேரே செயப்படு பொருள் என்னாது செயப்படுபொருட்கண் அடங்கும்
என்றார்.

களிறு மிதித்தநீர், எள் ஆட்டிய எண்ணெய், உண்ட எச்சில் என்பன முறையே
மிதித்தலான் வந்த காரியமாகிய நீர், ஆட்டியதனான் வந்த காரியமாகிய எண்ணெய்,
உண்ட- தன் காரியமாகிய எச்சில் எனப்பொருள் படுதலின் ஆறு சென்ற வியர்
என்பதுபோலச் செயப்படுபொருட்கண் அடக் கப்படும். இவற்றை நேரே
செயப்படுபொருள் என்று கூறாமைக்குக்காரணம் மேலே குறித்தாங்குக் குறித்து அறிந்து
கொள்க.