இ-ள்: உறுகால் என்புழி, உறு என்னும் சொற்குப் பொருளாகிய மிகுதி என்பதன் பொருளும் அறியாத மடவோன் ஆயின் அவ்வாறு ஒருபொருட்கிளவி கொணர்ந்து உணர்த்தல் உறாது, ‘கடுங்காலது வலிகண்டாய் உறு என்பதற்குப் பொருள்’ என்று தொடர்மொழி கூறியானும் கடுங்கால் உள்வழிக் காட்டியானும் மாணாக்கன் உணரும் வாயில் அறிந்து உணர்த்தல் வல்லவன் ஆயின் அப்பொருள் திரிபுபடாமல் அவன் உணரும் என்றவாறு. அவ்வாற்றானும் உணர்தல் ஆற்றாதானை உணர்த்துமாறு என்னை எனின் அதற்கு அன்றே வருஞ்சூத்திரம் எழுந்தது என்பது. 13 |