பக்கம் எண் :

34 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

அன்மொழித்தொகைப் பொருள்மேல் வரும்
ஆகுபெயர்

சி.கணேசையர்
 

அன்மொழித்தொகைப் பொருண்மேல் ஆகுபெயர் வரும் என்பது சேனாவரையர்,
பரிமேலழகர் முதலாயினோர் கருத்து. தொல்காப்பியத்துச் சொல்லதிகாரத்து வேற்றுமை
மயங்கியலில் ‘முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும்’ சொல்.114 என்னும் ஆகுபெயர்ச்
சூத்திரத்து ‘இருபெயரொட்டும்’ என்தற்குச் சேனாவரையர் பதவுரையில் ‘அன்மொழிப்
பொருள் மேல் நின்ற இருபெயரொட்டும்’ என உரைத்து, விசேடவுரையில்,
“அன்மொழித்தொகை எச்சவியலுள் உணர்த்தப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டா
எனின் அன்மொழித்தொகை தொகையாதலுடைமையான் ஆண்டுக்கூறினார்; இயற்கைப்
பெயர் ஆகுபெயர் எனப் பெயர் இரண்டாய் அடங்கும்வழி ஒரு பெயர்ப்பட்டதென
மேலும் வந்தவாறு கண்டுகொள்க. அன்மொழித்தொகை எச்சவியலுள் உணர்த்தப்படும்;
அதனால் அவ்வாகுபெயராதலுடைமை பற்றி ஈண்டுக் கூறினார். எச்சவியலுட்
கூறப்பட்டவாயினும் வினையெச்சம் முதலாயின வினைச்சொல்லாதலும்
இடைச்சொல்லாதலும் உடைமையான் வினையியலுள்ளும் இடையியலுள்ளும் கூறியவாறு
போல என்பது” என உரைத்தமையானும்,

‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை’ மாதர்கொல் மாலுமென்
எனஞ்சு’ என்னும் குறள் (1081) உரையில் கனங்குழை என்பதற்குப் பரிமேலழகரும்
அன்மொழித்தொகைப் பொருளமைய ‘இக்கனவிய குழையினை உடையாள்’ என்று
பொருள் உரைத்து விசேட உரையில் இரண்டும் ஒன்று என்பது தோன்றக் ‘கனங்குழை
ஆகுபெயர்’ என உரைத்தமையானும் அது கருத்து என்பது போதரும். இலக்கணவிளக்க
நூலாரும் சொல்லதிகாரத்துப் பெயரியலில்