"குவளைக் கருங்கண் கொடிஏர் இடைஇக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுஉயிர் என்றது தன்னோடு உவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தான் அருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னல்இன் னேஇனிச் சொல்லுவனே."
[ஒப்பற்ற பார்வதியைத் தன் இடப்பாகமாகக் கொண்ட சிவபெருமானின் அருள் இல்லாதவரைப் போல, என்மனம் வாடுமாறு வந்துள்ள துன்பத்தை, தலைவியின் கடைக்கண்களால் தன் உயிர்போல்வாள் என்று அறிவிக்கப்பட்ட தோழியிடம் யான் போய்ச் சொல்லுவேன்.]
"ஒருங்குஅட மூஎயில் ஒற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுஉகு நால்வாய்க் கரிஉரித் தோன்கயிலை
இருங்கடம்மூடும்பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே
வருங்கள்தம் மூர்பகர்ந் தால்பழி யோஇங்கு வாழ்பவர்க்கே".
[திரிபுரத்தை அழித்து, யானையைக் கொன்று தோலை உரித்த சிவபெருமானின் கயிலைச் சோலையில் உள்ள கொடி போல்வீர்! இப்பொழுதே வாருங்கள், இவ்வூரில் வாழ்வார் தம் ஊர்ப் பெயரைக் கூறுதல் பழியாகுமோ?]
"தார்என்ற ஓங்கும் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த
கார்என்ன ஆரும் கறைமிடற்று அம்பல வன்கயிலை
ஊர்என்ன என்னவும் வாய்திற வீர்ஒழி யீர்பழியேல்
பேர்என்ன வோஉரை யீர்விரை ஈர்ங்குழல் பேதையரே".
|
|
|
|