402                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [பற்றறுத்து என்னை ஆண்டுகொண்ட சிற்றம்பலவன் தில்லையைச்
 சூழ்ந்த தேசத்தனவாய் நின்னால் தரப்பட்டனவாகிய பூக்களையும்
 தழையுடையையும் யான் தலைவியிடத்துக் கொடுத்த அளவில், அவள்
 நிகழ்த்திய செயல்களைக் கூறப்புகில் அக்கூற்று நீண்டுவிடும். சுருங்கச்
 சொல்லின், அவற்றை அரைத்துத் தன் மெய்யில் அவள் பூசிக்கொள்ளு
 தலைத் தவிர்த்து அவற்றைக் கொண்டு வேறு  எல்லாச்செயல்களையும்
 செய்துவிட்டாள்.]

     குறியிடம் கூறல்:

 "வானுழைவாள் அம்பலத்தரன்குன்றுஎன்றுவட்கிவெய்யோன்
  தான்நுழை யாஇரு ளாய்ப்புறம் நாப்பண்வண் தாரகைபோல்
  தேன்நுழை நாகம் மலர்ந்து திகழ்பளிங் கால்மதியோன்
  கானுழைவாழ்வுபெற்றாங்குஎழில்காட்டும்ஓர்கார்ப்பொழிலே"

                                                 திருக்கோவை 116

 எனவும்,

     [இருட்கு அப்பாலாகிய வான்இடத்து உண்டாகிய ஒளியாய்ச் சேயன்
 ஆயினும் அணியனாய் அம்பலத்து நிற்கும் அரனதுகுன்று என்று கூசி
 வெய்யவன் நுழையாத இருளாய்ப் புறத்தே காட்சி தந்து, நடுவில்
 விண்மீன்போல ஒளி வீசும் நாகப்பூக்கள் மலர்ந்து, திகழும் பளிங்கு
 ஒளியினால் சந்திரன் வான்இடத்து வாழ்தலை விடுத்துக் கான்இடத்து
 வாழ்தலைப் பெற்றாற்போல ஒரு கரிய பொழில் தன் எழிலை
 வெளிப்படுத்தும்.]

     குறியிடத்து இறைவியைக் கொண்டு சேறல்:

 "புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும்
  அயல்வளர் குன்றில்நின்று ஏற்றும் அருவி திருஉருவில்
  கயல்வளர் வாள்கண்ணி போதரு காதரம் தீர்த்துஅருளும்
  தயல்வளர் மேனியன் அம்பலத் தான்வரைத் தண்புனத்தே

                                                 திருக்கோவை 117

 எனவும்,