குரவர் ஆவார் இவர் என்பது,
அரசன் உவாத்தியாயன் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்ஐவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுதுஎழுக என்பதே
யாவரும் கண்ட நெறி. ஆசாரக்கோவை.
என்பதனான் அறிக.
வதுவைச்சடங்கு, ‘இவளை நீ இன்னவாறு பாதுகாப்பாய்' எனவும்,
‘இவற்கு
இன்னவாறே நீ குற்றேவல் செய்து
ஒழுகு' எனவும், அங்கியங்
கடவுள்
அறிகரியாக மந்திரவகையால் கற்பித்தல்.
உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவைப்
பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக்
கனைஇருள் அகன்ற கவின்பெறு காலை
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடுஇல் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வர்ப் பயந்த திதலைஅவ் வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரி்ந்த ஈர்இதழ் அலரி
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேல்எனப் புகுந்து
பேரில் கிழத்தி ஆகஎன மாதர்
ஓர்இல் கூட்டிய உடன்புணர் கங்குல்
|