அகத்திணையியல்--நூற்பா எண் 159541

பராநிலை கண்ட தலைமகன் மகிழ்தல்:



பாண் ஆர் சுரும்பு விரும்புதண் சாரல் பனிஅருவிச்
சேண்ஆர் சிலம்பின் உறையும் கடவுளைத் தேமலர்தூஉய்
வாள்நாடு கண்ணி மணம்பொருட் டாக வழுத்தும்அன்பு
காணாய் மடநெஞ்ச மேவஞ்ச8 மோநங்கள் காதன்மையே,

அம்பி. 336


எனவும் வரும்.

      [நெஞ்சே! வண்டுகள் விரும்பும் சாரலில், உயரத்திலிருந்து அருவி
விழும் மலையில் உறையும் தெய்வத்திற்கு மலர்தூவித் தலைவி தன்மணம்
இனிதின் ஈடேறுவதற்காக வழிபடும் அன்பைக்கண்டு, யான் தலைவியோடு
கொண்டுள்ள நட்பு வஞ்சனை உடையதுஅன்று என்பதைத் தெளிந்து

அறிவாயாக.]

      இவற்றுள் காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு
உணர்த்தலும், தலைவி மணம் பொருட்டாக அணங்கைப் பராநிலை பாங்கி

தலைமகற்குக் காட்டலும் ஆகிய இரண்டும் வரைவு முயல்வு உணர்த்தற்கும்,

      பாங்கி தமர்வரைவு எதிர்ந்தமை தலைமகட்கு உணர்த்தல் ஆகிய
ஒன்றும் வரைவு எதிர்வு உணர்த்தற்கும்,

      தலைவி நற்றாய் உள்ளமகிழ்ச்சி உள்ளலும் உவகை ஆற்றாது
உளத்தோடு கிளத்தலும் தலைமகனைப் பாங்கி வாழ்த்தலும் ஆகிய மூன்றும்
வரைவு அறிந்து மகிழ்தற்கும்,

      தலைமகன் அணங்கைப் பராநிலைகண்டு மகிழ்தல் ஆகிய ஒன்றும்
பரவல்கண்டு உவத்தற்கும் உரியவாம்.

159


அறத்தொடுநிலையின் வகை


532 முன்னிலை முன்னிலைப் புறமொழி என்றாங்கு
    அன்னஇரு வகைத்தே அறத்தொடு நிலையே.