8 அ ‘தலைவி பூப்பு எய்தி
நீராடியபின் ஈராறுநாளும் தலைவியுடன்
தலைவன் இருத்தல் வேண்டும்' என்ற விதியை அறிந்து
பரத்தையர் தலைவனைத் தலைவிபால் விடுத்தல்.
ஆ தலைவன் பரத்தையர் இல்லத்தை விடுத்துத் தலைவியை
நோக்கி வருதலைக்கண்டு, பாங்கி முதலிய வாயிலோர் மகிழ்ந்து
கூறுதல்.
9 தலைவன் தலைவியை நோக்கி வருஞ் செய்தியைப் பாங்கி
தலைவிக்கு உணர்த்துதல்.
10 தலைவி தலைவன் தவற்றை மறந்து அவனை எதிர்கொண்டு
அழைத்தல்.
11 இருவரும் புணர்ச்சியின் மகிழ்தல்.
இவை உணர்த்த உணரும் ஊடலுக்கு உரிய துறைகளாம்.
‘புலவி--புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைவுபடாமல் காலம் கருதிக்கொண்டு உய்ப்பது
ஓர் உள்ளநிகழ்ச்சி.
ஊடல்--உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்புமொழியான் அன்றிக்
கூற்றுமொழியான் உரைப்பது.
அங்ஙனம் ஊடல் நிகழ்ந்தவழி அதற்கு ஏதுவாகிய பொருள் இன்மை
உணர்வித்தல் உணர்வு எனப்படும். இல்லது கடுத்த மயக்கம் தீர
உணர்த்துதலான் உணர்த்துதல் எனவும், அதனை உணர்தலான் உணர்வு
எனவும் படும். புலவிக்காயின் உணர்த்துதல் வேண்டா; அது
குளிர்ப்பக்கூறலும் தளிர்ப்ப முயங்கலும் முதலியவற்றான் நீங்குதலின். ஊடல்
முதிர்வான் பிறப்பது துனி. அது பிரிவின் பாற்படும்; என்னை? காட்டக்
காணாது கரந்து மாறுதலின். ‘துனி வெறுப்பு' என்று பேராசிரியர் வரைந்த
விளக்கம் உளம்கொளத்தக்கது.
(தொல் பொ. 499. பேரா.) |