அகத்திணையியல்--நூற்பா எண் 184683

      தலைமகனைப் புணர்ந்து நீங்கியபின் வந்த பாங்கியொடு
              தன்மகனைப் புகழ்ந்து உரைத்தல்:

இருமையில் ஏயும் பயன்களெல் லாம்தன்னை ஈன்றநமக்கு
ஒருமையிலேவந்துறத்தகைந்தான்மைந்தன் ஒண்சுடர்போல்
வரும் அயிலேகொண்டுமா தடிந்தான் அன்னவாணன்தஞ்சைத்
திருமயி லேஅனை யாய்புன லூரனைத் தேருடனே.

தஞ்சை. 405

எனவும்,

       [வேலால் கிரவுஞ்சமலையைப் பிளந்த முருகனை ஒத்தவாணன்
தஞ்சையில் உள்ள மயிலனையாய்! இம்மை மறுமை என்ற இரு பிறப்பிலும்
நமக்குக் கிடைக்கக் கூடிய பயன்களை எல்லாம் தன்னைப் புதல்வனாகப்
பெற்றெடுத்த நமக்கு இவ்வொரு பிறப்பிலே வந்து பொருந்துமாறு, நம்
புதல்வன் தலைவனைத் தேரோடு தடுத்து நம் மனைக்குக் கொண்டுவந்து
விட்டான். இப்பாடல் அகநானூறு 66ஆம் பாடற்கருத்தைக் கொண்டது.]
 

தலைவி தலைவனைப் புகழ்தல்:
 

கொண்டானில் துன்னியகேளிர்மற்றுஇல்லைக் குறிப்பின்என்று
தண்டா தவர்சொன்ன சால்புகண் டேன்தலம் ஏழ்புரக்கும்
வண்தார்மணிப்புயன்வாணன் தென்மாறைமகிழ்நர்முன்னாள்
உண்டா கியபழங் கேண்மைஇந் நாளும் ஒழிந்திலரே.

தஞ்சை 406


எனவும்
,

      [உலகம் காக்கும் அழகிய புயத்தை உடைய வாணனது
தென்மாறையில் தலைவன் பண்டு நம்மாட்டுக்கொண்ட நட்பினை இன்னும்
மறக்கவில்லை ஆதலின், ‘கணவனைப்போலச் சிறந்த உறவினர் வேறு
யாவரும் இரார்' என்று சான்றோர் சொன்ன மேதக்க மொழியின் பொருள்
புலனாயிற்று.]