[யான் பலபிறவிகளை எடுக்காதவகை
என்னை ஆட்கொண்ட
சிவபெருமானது தில்லையைச் சூழ்ந்த பொழிலிடத்தே பூத்த போதுகளால்
தனது இயற்கைமணம் மாற்றுதற்கு அரிதாகிய கூந்தலைஉடைய தலைவியே!
ஒருவர் உள்ளமிகுதியை ஒருவர் தணித்தற்கு அரியராகிய வேந்தர் இருவர்
தம்மிடையேகொண்ட பகையை நீக்கி அவரிடை அமைதி நிலவுமாறுசெய்ய,
நம் தலைவன் செல்லுதலை மேற்கொண்டுள்ளான்.]
தூதில்பிரிந்துழித் தலைவி முன்பனிப்பருவம் கண்டு வருந்தல்:
பருந்துஆர் சுடர்இலை வேல்பகை வேந்தர் பகைதணிப்பப்
பிரிந்தார் வருகிலர் பெய்வளை யாய்பிர சம்புலந்து
கருந்தா மரைஎன்னச் செந்தா மரைகரு கப்பெருக
வருந்தார் வருந்துற மஞ்சுதெற்கு ஓட வரும்பனியே.
அம்பி. 526
எனவும்,
[பெய்வளையாய்! பருந்துகள் பின்தொடரும் வேற்படை உடைய, பகைத்த
வேந்தர்தம் பகையைப் போக்கிச் சந்து செய்விக்கப் பிரிந்த நம் தலைவர்
இம்முன்பனிக்காலத்தும் மீண்டு வந்திலர். வண்டுகள் வெறுத்துச் செல்லச்
செந்தாமரைகள் கருந்தாமரைபோலக் கருகவும், இதற்குமுன் பிரிவுகருதி
வருந்தாதவரும் வருந்தவும் மேகங்கள் தென்புறம் ஓட முன்பனிக்காலம்
வந்துள்ளது.]
தூதில் பிரிந்துழி முன்பனிப்
பருவம் கண்டு வருந்திய
தலைமகளைத் தோழி ஆற்றுவித்தல்:
சுற்றும் குழல்நின் பிணிவிடுப்
பான்வந்து தோன்றினர்பார்
முற்றும் பொழிகின்ற முன்பனி நாள்முகி லும்கடலும்
வற்றும் பருவத்தும் மண்புரப்பான் தஞ்சைவாணன் ஒன்னார்ச்
செற்றும் படையின்வெம் போர்தணிப் பானன்று சென்றவரே.
தஞ்சை. 416
எனவும் வரும். பிறவும் அன்ன. |