அகத்திணையியல்--நூற்பா எண் 189,190717

    ‘அளவில் இன்பத்து ஐந்திணை மருங்கின்


     களவுகற்பு எனஇரு கைகோள் வழங்கும்.'

 இ. வி. பொ. 24

எனவும் கூறப்பட்டன.

189


கூற்றிற்கு உரியார்


562 பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
    சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியோடு
    அளவியல் மரபின் அறுவகை யோரும்
    களவியல் கிளவிக்கு உரியர் ஆகலும்
    பாணன் கூத்தன் விறலி பரத்தை
    யாணம் சான்ற அறிவர் கண்டோர்
    பேணுதரு சிறப்பின் பார்ப்பான் முதலா
    முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத்
    தொன்னெறி மரபின் கற்பின் கிளவிக்கு
    உரியர் ஆகலும் உரிய வாகும்.


      இது, மூன்றாம் எண்ணும் முறைமைக்கண் நின்ற கூற்று இருவகைக்
கைகோளினும் செய்யுட்கு உறுப்பாய் வருங்கால், அஃது இத்துணைத்தாய்
வரும் என்பதோர் ஒழிபு கூறுகின்றது.

      (இ-ள்) பார்ப்பான் முதலாகச் சொல்லப்பட்ட கலந்து ஒழுகும்
மரபினைஉடைய அறுவகையோரும் களவு என்னும் கைகோள்பற்றிச்
செய்யுளகத்து நிகழும் கிளவி கூறுதற்கு உரியர் ஆகலும், பாணன் முதலாகச்
சொல்லப்பட்ட அறு வகையோரும் மேல்சொல்லப்பட்ட பார்ப்பான்
முதலாகிய அறுவகையோரொடும் கூடப் பன்னிருவரும் கற்பு என்னும்
கைகோள்பற்றிச் செய்யுளகத்து நிகழும் கிளவி கூறுதற்கு உரியர் ஆகலும்
சிறந்தனவாம் என்றவாறு.

     ‘தொன்னெறி மரபு' என்றதனால், பாகனும் தூதனும் கூறவும் அமையும், அவர் ஏனையர் போலச் சிறப்பிலர் ஆயினும் எனக்கொள்க.