அகத்திணையியல்--நூற்பா எண் 206763

என
 

என்றார் என்பது. இஃது என் சொல்லியவாறோ எனின் சுவைக்கப்படும்
பொருள் பற்றிப் பொருள் உணர்வாகிய சுவையும், அச்சுவைபற்றி
உள்ளநிகழ்ச்சியாகிய குறிப்பும் அக்குறிப்புப் பற்றிய புறத்துள் தோன்றும்
மெய்மயிர் சிலிர்த்தல் கண்ணீர் அரும்பல் முதலிய விறலும் பிறத்தலின்,
இங்ஙனம் கூறிய முப்பத்திரண்டு சுவைப்பொருளும் அம்மூன்றனையும்
உள்ளடக்கி அவை பிறத்தற்கு முறையே காரணமாய் நிற்கும் என்றவாறாம்
என்க. விறல் எனினும், சத்துவம் எனினும் ஒக்கும்.
 

விளக்கம்


    சுவைப்பொருளைக் கண்டவழிச் சுவைஉணர்வு தோன்றும். சுவை
உணர்வால் மனத்தில் அச்சுவைப்பொருள் பற்றிய குறிப்பு உண்டாகும்.
அக்குறிப்பு மெய்ப்பாட்டானே புறத்தே புலனாகும். எடுத்துக்காட்டாக,

சுவைப்பொருள்- சிற்றுண்டி; சுவைஉணர்வு-சிற்றுண்டியை உண்ணும்
இயற்கைப்பண்பு; குறிப்பு - அச் சிற்றுண்டியை உண்ணல் வேண்டும் என்று
மனத்துப்படும் ஆசை; சத்துவம் - நாவில் நீர் ஊறுதல், சிற்றுண்டியைப்

பெற ஆவன செய்தல் போல்வன.

    சுவைக்கப்படும் பொருள், சுவைஉணர்வு, குறிப்பு, சத்துவம் என்ற
நான்கனையும் உள்அடக்கிச் சுவை என்று பொதுப்படக் கூறினார்.

    தான் உட்கொண்ட நடிக்கும் மெய்ப்பாடு காண்பாருக்கும் பிறக்கும்

வண்ணம் ஆடும் கூத்தி, விறல்பட ஆடலின், விறலி என வழங்கப்பட்டதும்
காண்க.

    இம் மெய்ப்பாட்டுப்பகுதிச் செய்திகள்யாவும் தொல்காப்பியத்தையும்
பேராசிரியர் உரையையும் அடிஒற்றி அமைந்தவை.]