புகுதல் - தலைமகன் நோக்கிய
நோக்கு எதிர் தான் சென்று புகுதல்;
முகம் - அங்ஙனம் தான் புகுதற்கு இடமாகிய நோக்கு; நோக்கெதிர்
நோக்குதலை
முகம் நோக்குதல் என்ப ஆகலின் நோக்கினை முகம்
என்றார் என்பது.
புரிதல் - மேவுதல். அஃதாவது தலைமகன்
காண்டலைத் தலைமகள்
வேட்டல் என்றவாறாம். மற்று, இது தலைமகற்கு
உரித்து அன்றோ எனின்,
அவன் தான் காண்பின் அல்லது,
தற்காண்டலை நயவான், அது தலைமை
அன்று ஆகலின். அது,
‘யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.’
குறள். 1094
என வரும்,
2 பொறிநுதல் வியர்த்தல்:
தலைமகன் தன்னை நோக்கியவழி உட்கும் நாணும் ஒருங்கு வந்து
அடைதலின், வியர்ப் பொறித்த நுதலாள் ஆதல். அது,
‘பெரும்புழுக்கு உற்றநின் பிறைநுதல் பொறிவியர்
உறுவளி ஆற்றச் சிறுவரை திறவென’
அகநா. 136
என வரும்.
இம்மெய்ப்பாடும் தலைமகற்கு உரித்தன்று, உட்கும் நாணும் அவற்கு
இன்மையின்.
3 நகுநயம் மறைத்தல்:
அதன்பின்னர்த் தலைமகன்கண் தோன்றிய குறிப்புக்களான் நகுதற்கு
ஏதுவாகிய நயனுடைமை மனத்தின்கண் பிறந்தவழியும் நகாது நிற்றல்.
அது,
‘முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.’
குறள் 1274 |