836இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

      தலைவனை இனிக்காணும் வாய்ப்பே இல்லாது போய் விடுமோ?’ என்று தலைவி எண்ணமிட்டமை இப்பாடலால் புலனாம்.]

5  பசிஅட நிற்றல் :


   பசி வருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல். அது,

     ‘அன்னாய் வாழிவேண்டு அன்னை நின்மகள்
      பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
      நனிபசந் தனள்என வினவுதி.’

அகநா. 48

எனவரும.

     [செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்குமாற்றான் தலைவனும் தலைவியும் சோலையில் சந்தித்த வாய்ப்பையும் தலைவனைப்பற்றித் தலைவி கொண்ட எண்ணத்தையும் வெளியிடப் புகுந்த தோழி, தன்தாய் முதலில் வினவியதைக் கொண்டெடுத்து மொழியுமாற்றான், ‘தாயே! உன்மகள் பால்கூடப் பருகாது, துன்பங்கொண்டு உடல் பசலையுற்றதன் காரணம்பற்றி என்னை வினவுகின்றாய்; யானும் அதன் காரணத்தை தெளிவாக உணரேன். ஆயினும் நிகழ்ந்த நிகழ்ச்சி இது’ என்று கூறிய கூற்றில், தலைவி தலைவன் பிரிவால் பால்உணவைக் கூட வெறுத்த செய்தி உரைக்கப்பட்டவாறு. ]

6  பசலை பாய்தல்:


   பசலை பரத்தல். அது,

      ‘கன்றும் உண்ணாது கலத்தினும் படா அது
      நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு
      எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
      பசலை உணீஇயர் வேண்டும்
      திதலை அல்குல்எம் மாமைக் கவினே.’

குறுந். 27

எனவரும்.