842இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

இயற
 

இயற்கைப்புணர்ச்சிக் காலத்தில் ‘நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேன்’
என்று கூறிய சொற்களைப் பொய்த்துப் பரத்தையரை வதுவை அயர்தற்கண்
ஈடுபட்டு விட்டான் எனவும், தலைவி கற்பனை செய்துகொண்டு, தலைவன்
தன்னிடத்து விருப்பான் மகனை வாயிலாகப் பெற்றுத் தன்னைச் சார்ந்த
உண்மையைப் பொய்யாகக் கருதுதல் பொய்யை மெய் என்று கோடலாம்.]

13  ஐயம் செய்தல்: அது,

    ‘தூதுஅவர் விடுத்தரார் துறப்பார்கொல் நோதக
    இருங்குயில் ஆலும் அரோ.’

கலி. 33


எனவரும்.

     [பருவவரவின்கண் வன்புறை எதிர் அழிந்து ஆற்றாள்ஆயினாளைத்
தோழி தலைவனது வரவு உணர்ந்து கூறி ஆற்றுவித்த பாடலில், தலைவி
வன்புறை எதிரழிந்து சொற்ற பகுதியுள் இதுவும் ஒன்று.

     ‘நம் வருத்தங்கண்டு சிரிப்பனபோலக் கொம்புகள் பூ மிக்கன.
அதனைக்கண்டு என்நெஞ்சம் வருந்துகின்றது. மயில்கள் நம்மை இகழ்ந்து
ஆடுகின்றன. அதுகண்டு என் கைவளைகள் கழலுகின்றன. என் கண்களைப்
போல ஆற்று நீர் அறுதலையுடையதாய் இற்று ஒழுகும் இளவேனிற்
காலத்தும் தலைவன் வந்திலன். அதனால் எனக்குப் பிரிதல் துன்பம்
மிகுகிறது. யாழ்இசை போல ஞிமிறும் தும்பியும் ஒலிக்கக் குயில்கள் நமக்கு
நோவு உண்டாகும்படி கூவுகின்றன. இவ்வளவிலும் தலைவன் நம்மாட்டுத்
தூது ஒன்றனையும் அனுப்பினான் அல்லன். நம்மை இப்பிறப்பில் துறந்து
விடுவானோ ?’ என்று தலைவன் பிரிவைப் பெறாது, அவன் தன்னைத்
துறந்து விடுவானோ என்று தலைவி வாளா ஐயுற்றவாறு]