அழைக்கிறாள். அத்தகைய நேரத்தில்
தன் மலையிலுள்ள சந்தனம் மணம்
வீசும் மார்பினன் ஆகிய தலைவன் மழையில் நனைந்த யானையைப்போல
இவ்வீட்டுப் புறத்தேவந்து நின்றான். அந்தோ! இந்நள்ளிருளில் ஓயாத
மழையில் என்ன காரியத்தை மேற்கொண்டு வந்தானோ?’ என்ற பகுதியில்,
இரவுக்குறிக்கண் தலைவன் வந்திருப்பதை அவன் சந்தனத்தின் மணத்தால்
அறிந்தும், அவன் தன்மாட்டுக் காதலால் இருளில் பெருமழையிடை
வந்திருப்பதை உணர்ந்தும், தான் இரவுக்குறியை வேண்டாளாய்த்
தாய்பக்கலில் விழித்திருப்பதாகக் காரணம் காட்டியதோடு, ‘தலைவன் என்ன
காரியத்தை மேற்கொண்டு வந்தான் ?’ என்ற கூற்றில், தலைவி தான்
இரவுக்குறியை எதிர்நோக்கிக் காத்திராமல் மனையகத்துத் துயிலோடு
வைகியசெய்தி புலப்படுத்தப்பட்டவாறு. தாய் ‘அன்னையே!’ என்று விளித்த
அளவில் தான் விழித்தாளாக, அப்பொழுது இருளையும் செறிந்த
மழையையும் கண்ணில்கண்டு, தலைவன் வருகையை அவன் சந்தன
மணத்தால் ஓர்ந்து சொற்றாள் என்பதும் அறிக.]
7 காதல் கைம்மிதல்:
காமம் கைஇகந்தவழி நிகழும் உள்ளக் குறிப்பு. அஃது,
‘உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின்எம் அளவைத்து அன்றே வருத்தி
வான்தோய்வு அற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே’
குறுந். 102
எனவரும்.
[‘ஆற்றாள்’ எனக் கவன்ற தோழிக்கு, ‘யான் எங்ஙனம் ஆற்றுவேன்?’ என்று
தலைமகள் கூறிய பாடல் இது.
‘தலைவன் இங்ஙனம் அருமை செய்து அயர்த்தலை நினைத்தால் என்
உள்ளம் வேவா நிற்கும். உள்ளத்தை வேவச் செய்வதால், ‘அவனை
நினையாது இருப்போம்’ எனின், |