856இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

நினையாது இருப்பது என் ஆற்றல் அளவிற்கு உட்பட்ட தன்று. காமம்
என்னை வருத்தி வானத்தைத் தோய்வது போன்ற பெருமையை உடையது.
நம்மால் தழுவப்பட்ட தலைவன் இவ்வாறு வரைதல் வேண்டாது களவு
ஒழுக்கம் கருதித் துயரம் தருதலின், தக்கவன் அல்லன்’ - என்ற தலைவி
கூற்றில், களவுக் காலத்துப் பிரிவு கருதித் தன்னைக் காதல்நோய்
துன்புறுத்துவதனைக் கூறும் வாயிலாக அவள் வரைதல்வேட்கையைப்
புலப்படுத்தவாறு.]

8  கட்டுரை யின்மை:

   உரை மறுத்திருத்தல் அஃது,
   ‘யான்தன் அறிவல் தான்அறி யலளே
   யாங்கா குவள்கொல் தானே
   பெருமுது செல்வர் ஒருமட மகளே.’

குறுந். 337

எனவரும்.

     [தோழியை இரந்து பின்நின்ற கிழவன் தனது குறை அறியக் கூறிய
பாடற் பகுதி இது.

     ‘தலைவியின் நகில்கள் அரும்பின. தலைமயிர் பிடரியை விட்டு
இறங்கும் அளவு வளர்ந்துவிட்டது, பற்களும் விழுந்து முளைத்துவிட்டன.
தேமலும் சில தோன்றிவிட்டன. அவள் என்னை வருத்துதலை யான்
அறிவேன். அவள் அதனை அறிந்திலள். செல்வரின் மகளாகிய அவள்
எத்தன்மையை உடையள் ஆவளோ?’ - என்ற தலைவன் கூற்றில், தலைவி தலைவனுடன் எதுவும் உரையாடாமல் தன்னை அவன் அடைதல் வேண்டின் தன்தமரை வேண்டி வரைந்து எய்துதல் வேண்டும் என்பதைக்
குறிப்பால் தெரிவித்தமையின், கட்டுரையின்மை என்ற மெய்ப்பாடு
புலப்பட்டவாறு.

    இப் பொருளுக்கு இது களவுக் காலத்துத் தலைவி தலைவனிடம்
வரைதல் வேட்கையான் உரையாதிருத்தல் என்று துறை கொள்ளுதல்
சிறக்கும்.]