7 அருள்மிக உடைமை:
களவுக்காலத்துப் போலத் துன்பம் மிகுதலின்றி அருள் மிகத் தோன்றிய
நெஞ்சினளாதல். அது,
‘நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர்
என்றும் என்தோள் பிரிவுஅறி யலரே.'
நற். 1
எனவரும்.
[தலைவனுடைய பிரிவைத் தோழி உணர்த்த உணர்ந்த தலைவி
தலைவனைப்பற்றி ‘அவர் நட்பு மிக மேதக்கது. நீர் இன்றி உலகு வாழாது;
அதுபோல அவர் இன்றி நாம் வாழோம். அவர் நம் நுதல் பசத்தலை
அறிந்து நம் ஆற்றாமையை உணர்ந்து அத்தகைய சிறுசெயல் செய்யார்;
அவர் நிலைபெற்ற சொல்லை
உடையவர் ஆதலின், ‘நின்னிற்பிரியேன்;
பிரியின் ஆற்றேன்' என்று தாம் கூறிய சொல்லைப் பிறழார். தம்
செயல்களால் நமக்கு எப்பொழுதும் இனிமை செய்யும் அவர் என்றும்
என்தோள்களைப் பிரிய மாட்டார்-- என மனத்தில் தலைவனைப்பற்றி
உயர்ந்த எண்ணம் கொண்டிருத்தல் புலப்படுத்தப் பட்டவாறு]
8 அன்பு தொக நிற்றல்:
களவுக்காலத்துப் பிரிந்த அன்புஎல்லாம் இல்லறத்து மேல் பெருகிய
விருப்பினனே ஒருங்கு தொகநிற்றல். அஃது,
‘எம்போல், புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து
நெல்லுடை நெடுநகர் நின்இன்று உறைவாள்
என்ன கடத்தளோ மற்றே'
அகநா. 176
என்புழி, ‘புதல்வற் பயந்து
நின் இன்று உறையும் கடத்தினம் யாம்'
என்றமையின் இஃது அன்பு தொக நிற்றல் ஆயிற்று.
|