திருத்தல் இளிவாம்' என்று
கூறிக் காட்டைக் கடந்துபோய்த் தேடுதலைக்
கருதின பொருள் நன்கு மதிக்கப்படும் பொருள் ஆயினும், அருந்ததிபோல
எல்லாரும் தொழுது வாழ்த்தும் படி விளங்கிய கற்பனையை முன்பு
உடையவளுடைய காமச் செல்வியால் பெருமையை உடையவாகிய
மெல்லியவாய தோள்களைப் பிரியாதிருத்தல் நின் மனத்திற்குப் பொருளாய்
இருக்குமாயின், அதுவே பொருளாவது அல்லது பிரிகின்றது
பொருளாகுமோ?" என்ற கூற்றில், தலைவி தலைவன் பிரிவைச் சிறிதும்
ஆற்றாளாந்தன்மை புலப்படுத்தப்பட்டவாறு. ]
10 மறைந்தவை உரைத்தல்:
களவுக் காலத்து நிகழ்ந்தனவற்றைக் கற்புக் காலத்துக் கூறுதல். அது,
‘முயங்கல் விடஅல் இவைஎன மயங்கி
யான்ஓம் என்னவும் ஒல்லார் தாம்மற்று
இவைபா ராட்டிய பருவமும் உளவே
இனியே, புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத்
திதலை அணிந்த தேங்கொள் மென்முலை
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம்வேண் டினமே
தீம்பால் படுதல் தாம்அஞ் சினரே'
அகநா. 26
எனவரும்.
[தோழியை வாயில் வேண்டி அவளால் தான் வாயில் பெறாது பின்
ஆற்றாமையே வாயிலாகப் புக்குக் கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க
தோழியிடம் தலைமகள் கூறிய பாடற்பகுதி இது.
"தோழி! தலைவனைப் புலத்தல் கூடுமோ? மழை பெய்தலைப் பெற்ற,
முன்பு பல முறை உழப்பட்ட வயல்மண் போல என் நெஞ்சம் அவனிடம்
நெகிழ்ந்து விடுகிறது.
|