யான் இளையளாய் இருந்த
களவுக் காலத்தில் என் மார்பைப் பலவாறு
பாராட்டி விடாது அவன் தழுவ, யான் தழுவுதலை விடுக்குமாறு வேண்டியும்
தழுவிய கை நீக்காமல் என் வனப்பை அவன் பாராட்டினான். ஆனால்
இப்பொழுது கற்புக் காலத்தில் புதல்வனைப் பெற்ற முதியளாகிய நான்,
புதல்வன் பருகும் பாலை உட்கொண்டமையாலே பருத்துள்ள தேமல்
படர்ந்த என் மென்னகிலால் சந்தனம் பூசிய அவன் மார்பத்தைத் தழுவ
விரும்பும் காலத்தில் ‘பால் பட்டுவிடுமே?' என்று அவன் அஞ்சுகிறான்"
என்று கூறிய கூற்றில், களவுக்கால நிகழ்ச்சியைக் கற்புக்காலத்துத் தலைவி
சொற்றவாறு. ]
11 புறஞ்சொல் மாணாக் கிளவி:
தலைமகற்கு வந்த புறஞ்சொல்லின் பொல்லாங்கு குறித்து எழுந்த கிளவி.
அது,
‘களிறுகவர் கம்பலை போல
அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே.'
அகநா. 96
எனவரும். பிறவும் அன்ன.
[பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தோழி வாயில் மறுத்த பாடற்பகுதி இது.
‘ஊரனே! பரத்தையர் பலருள்ளும் நீ குறுமகள் ஒருத்தியை விரும்பிக்
கொண்டாய் என்று கூறுப. அஃது அஃதை தந்தை அண்ணல் யானை
அடுபோர்ச் சோழர், வெண்ணெல் விளையும் பருவூரை ஒட்டி அமைந்த
போர்க்களத்தே, ஏனைய சேரரும் பாண்டியருமாகிய இருபெருவேந்தரும்
போரிட்டுக்களத்து ஒழியுமாறு, தம் வாட்படையால் பெரிய போரைச் செய்து
வென்ற பொழுது, பகைவர்தம் யானைப் படையைக் கவர்ந்த பேராரவாரச்
செய்தி பலராலும் பேசப்பட்டது |