906இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

பாடப்படுவோர் பெயர்

 

594   நிலப்பெயர் வினைப்பெயர் பண்புப் பெயரோடு
     குலப்பெயர் இயற்பெயர் கூறுப அவர்க்கே.

     இது மேற்கூறிய இருவகைத் தலைவர்க்கும் உரிய பெயர்
இத்துணைத்து என்கின்றது.

     (இ-ள்) நிலப்பெயர் முதலிய ஐந்து பெயரும் கூறுவர், மேல்
சொல்லப்பட்ட தலைமக்கள் இருவர்க்கும் என்றவாறு.

     நிலப்பெயர்: மலைநாடன், சோணாடன், பாண்டி நாடன், வெற்பன்,
சேர்ப்பன் என்றாற்போல்வன,

    வினைப்பெயர்: கடம்பு எறிந்தான், தூங்கு எயில் எறிந்தான், வடிம்பு
அலம்ப நின்றான், கோவலன், வேட்டுவன் என்றாற்போல்வன.

    பண்புப் பெயர்: நெடுஞ்சேரலாதன், இளஞ்சேட்சென்னி, முதுகுடுமிப்
பெருவழுதி, தோன்றல், அண்ணல் என்றாற்போல்வன.

    குலப்பெயர்: சேரன், சோழன், பாண்டியன், குறவன், ஆயன்
என்றாற்போல்வன.

    இயற்பெயர்: குரவரால் பெற்ற பெயர். 222


விளக்கம்


       முன்னையன பாட்டுடைத் தலைவனுக்கும் பின்னையன
கிளவித்தலைவனுக்கும் கொள்க. வெற்பன்சேர்ப்பன், கோவலன்வேட்டுவன்,
தோன்றல் அண்ணல், குறவன்ஆயன் என்பன கிளவித்தலைவன் பெயர்கள்.
ஏனைய பாட்டுடைத் தலைவன் பெயர்கள்.

      கிளவித்தலைவனுக்கு இயற்பெயர் கூறப்படமாட்டாது என்பது அடுத்த
நூற்பாவில் கூறப்பட்டுள்ளது.