இ-ள் : மேல் கூறப்பட்ட பண்பு முதலிய மூன்றானும் உவமம் செய்யும் இடத்து
அப்பண்பு முதலிய வெளிப்பட வகுத்த விரி உவமை முதலாக மாலை உவமை
ஈறாகக் கிடந்த இருபத்து நான்கோடு அற்புதம் முதலாகக் கூறிய எட்டும் கூடத்
தொகுத்தலான் இங்ஙனம் கூறப்பட்ட முப்பத்திரண்டும் முன் விளக்கிய உவமை
அலங்காரத்தின் விரி எனப்படும் என்றவாறு.
[சந்திராலோகம், குவலயானந்தம் முதலியவற்றில் இவ்வுவமை விரிகளில் பல
தனித்தனி அணிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன. இவ்வுவமைவிரிகளில் பல
தொல்காப்பிய உவமவியலில் "வேறுபட வந்த உவமத் தோற்றம்" (தொ. பொ. 307)
என்ற தலைப்பில் அடக்கப்பட்டுள்ளன. தண்டியலங்காரம், வீரசோழியம், மாறன்
அலங்காரம் போல உவமை விரியின் பெயர்களைத் தொகுத்ததனோடு அமையாது,
ஒவ்வொன்றன் இலக்கணத்தையும் இவ்வாசிரியர் நூற்பாவிலேயே
குறிப்பிட்டுள்ளன பெரிதும் பயன் தருவதாகும்.]