104

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

தொகையுவமை

 அன்னவை போலாது ஆங்குஅவை கரப்பத் தொன்னெறிப் புலவர் தொகுத்த
 தொகை உவமை வருமாறு:

    "தாமரைப்போல் வாள்முகத்துத் தண்தரளம் போல்முறுவல்
     காமரு வேய்புரைதோள் காரிகையீர் ! - தேமருவு
     பூங்குழலின் வாசப் பொறைசுமந்து நொந்ததோ?
     பாங்குஉழலும் தென்றல் பரிசு."


 என வரும்.

     [உபமானம் உபமேயம் உவமைஉருபு பொதுத்தன்மை என்ற நான்கனுள்
 இறுதிக்கண் உள்ள இரண்டனுள் ஒன்றோ இரண்டுமோ மறைய வருவது தொகை
 உவமை. தாமைரமுகம், முத்த நகை, வேய்த்தோள் இவற்றை உடைய நங்கையீர் ! நும்
 குழலின்நறுமணமாகிய பாரம் தாங்காமல் தென்றல் விரைய உலாவுதல் இயலாது
 நொந்ததோ - என்று பாங்கிமதி உடம்பாட்டில் இருவரும் உள்வழித் தலைவன்
 வினவிய இப்பாடலில்,

  உபமானம்       உபமேயம்       உவமைஉருபு       பொதுத்தன்மை
  தாமரை          முகம்           போல்                -
  தரளம்           முறுவல்         போல்                -
  வேய்            தோள்          புரை                 -

 எனப் பொதுத்தன்மை மறைந்திருப்பது காண்க.

     உவமஉருபு தொகுதலையும் சொல்லிலக்கணம் நோக்கித் தொகைஉவமை என்றே
 மாறனலங்காரம் குறிப்பிடும்.

    "உரைத்த நான்கினும் ஒன்றிரண்டு இடையன
     யாப்பினுள் இடைப்பட்டு எஞ்சலும் தொகையே".            - மா. அ. 97 

    "ஒப்பென இருபொருள் விதித்திறம் உருபுஇவை
     தெரிவுற விரித்துச் செப்புதல் மற்றுத்
     தொகைஒப் பாம்குணத் தொழில்பயன் தொகலே"..        - தொ. வி. 330