112

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     இது புகழ்ச்சி உவமை எனவும் பெயர் பெறும்.

    "போதுநற் புகழ்ச்சி பொருளைப் புகழாது
     ஏதுவைப் புகழ்தல் என்மனார் புலவர்".                 - வீர. உரை. 156 

    "உவமையைப் புகழ்ந்துஉவ மிப்பது புகழே".             - மு. வீ. பொ. 9] 

நிந்தையுவமை

 சிந்தித்து ஒருவன் சேர்ப்பது ஓர் உவமையை நிந்தித்து உரைக்கும் நிந்தை
 உவமை வருமாறு :

    "மறுப்பயின்ற வாள்மதியும், அம்மதிக்குத் தோற்கும்
     நிறத்துஅலரும் நேர்ஒக்கும் ஏனும் - சிறப்புடைத்து;
     தில்லைப் பெருமான் அருள்போல், திருமேனி
     முல்லைப்பூங் கோதை முகம்"

 என வரும்.

     [நன்கு ஆராய்ந்து கொள்ளும் உபமானத்தைக் குறைபாடு உடையதாகக் கூறுவது
 நிந்தை உவமை ஆகும். சிவபெருமான் அருள் போன்ற அழகிய உடல் வனப்பை
 உடையளாய் முல்லை மாலை சூடிய தலைவியின் முகம், களங்கமுடைய சந்திரனையும்
 அச்சந்திரனுக்குத் தோற்கும் தாமரையையும் ஒக்கும் என்றாலும் குறைபாடு ஏதும்
 இன்மையால் அவற்றினும் சிறப்புடைத்து - என்ற இப்பாடலில், உபமானமாகிய மதி -
 மறுப்பயின்ற வாள் மதியம் எனவும், தாமரை - மதிக்குத் தோற்கும் நிறத்து அலர்
 எனவும் குறைகூறப்பட்டவாறு காண்க.

     இது பழிப்புவமை எனவும் பெயர் பெறும்.

    "இழுக்கில் பொருளை உயர்த்தி உவமையைப்
     பழிக்கப் படுவது பழிப்பெனப் படுமே".                 - வீர. உரை. 156 

     உவமையைப் பழித்துஉப மிப்பது நிந்தை".               மு. வீ. பொ. 10]