116

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 களங்கமும் அற்றுக் காணப்படுவதாய் என்னை மயக்கும் இது தலைவி முகமே என்ற
 தலைவன் கூற்றில், தாமரையும் மதியமும் காரணம் காட்டி விலக்கப்பட்டு
 உபமேயமாகிய முகமே கொள்ளப்பட்டவாறு.

     இது துணிவுவமை என்றும் பெயர் பெறும்.

    "அன்னது பொருவன்று எனஅடை விளம்பி
     இன்னது மெய்ப்பொருள் என்பது துணிவே".             - வீ. உரை. 156 

    "ஐயுற்ற அதனை அறிந்த துணிவது
     தேற்றம் என்மனார் தெளிந்திசி னோரே".                - மு. வீ. 11-14] 

இன்சொல்லுவமை

     ஆற்ற உவமை ஆற்றினும் பொருளின் ஏற்றம் இன்று என்னும் இன்சொல்
 உவமை வருமாறு :

     "மான்விழி தாங்கும் மடக்கொடியே! நின்வதனம்;
     மான்முழுதும் தாங்கி வருமதியம் - ஆனாலும்,
     முற்றுஇழை நல்லாய்! முகம்ஒப்பது அன்றியே,
     மற்றுஉயர்ச்சி உண்டோ மதிக்கு"

 என வரும்.

     [உபமானம் மேம்பட்டதாயினும் உபமேயத்தைவிட மேம்பட்டது அன்று என்று
 கூறுவது இன்சொல் உவமையாம். "மடக்கொடியே! உன்முகம் மானின் விழியையே
 தாங்கி நிற்கின்றது. மதியமோ மான் முழுதையும் தாங்கி நிற்கின்றது. அங்ஙனமாயினும்
 மதியம் நின் முகத்தை ஒக்கும் என்று கூறுதலே ஏற்குமேயன்றிமுகத்தினும் மேதக்கது
 என்று கூறுதல் ஏலாது" - என்ற தலைமகன் நயப்புரையில், உபமேயமாகிய மதியம்
 மானையே கொண்டுள்ளது என்று புகழ்ந்து அதனால் அஃது ஏற்றம் பெற வில்லை
 என்று சுட்டி உள்ளமை காண்க.