உவமை கூறாது, மதியின் ஒளி, தாமரையின் மலர்ச்சி இவற்றைக் கொண்டு அமைத்த
கற்பனையை முகத்திற்கு உவமை கூறியது செயற்கையாகிய விகார உவமை ஆயிற்று.
இயல்பு - இயற்கை; விகாரம் - செயற்கை.
இது விக்கிரிய உவமை எனவும் பெயர்பெறும்.
"இத்துணைப் பொருவில்வந்து எதிர்ந்தது, பொருள்என
அத்துணை மொழிவரின் அதுவிக் கிரியம்". - வீர. உரை. 157
"விகாரம் ஓர் உவமையை விகாரப் படுத்திப்
பொருளை உவமித்துப் போதரல் ஆகும்". - மு. வீ. பொ. 18]
மோகவுவமை
ஒரு பொருள் மீது எழும் வேட்கையான் மயக்கம் முறுகுதல் காட்டும் மோக
உவமை வருமாறு :
"கயல்போலும் என்றுநின் கண்பழிப்பல்; கண்ணின்
செயல்போல் பிறழும் திறத்தால் - கயல்புகழ்வல்;
ஆரத்தான் நோம்மருங்குல்! அம்தரள வாள்முறுவல்
ஈரத்தால் உள்வெதும்பும் யான்"
என வரும்.
[ஒருபொருளிடத்துக் கொண்ட வேட்கையால் மயக்கம் மிகுதலைக் காட்டி
உவமிப்பது மோக உவமையாம். "முத்து மாலையின் கனத்தால் வருந்தும் இடையை
உடையாய்! உன் புன்-முறுவலினால் வெளிப்படுத்தப்பட்ட அன்பு காரணமாகக் காம
நோயால் மனம் வெதும்பும் யான் நின் கண்கள் கயல்போன்று உள்ளன என்று
கண்களைப் பழித்துப் பின் நின கண்கள்போல் பிறழ்வது கண்டு கயல் மீன்களைப்
புகழ்கிறேன் - என்ற தலைவன் நயப்புரையில் முதலில் பழித்த கண்ணிடத்துப்
பின்கொண்ட வேட்கையான் அதன் ஒப்புமைப் பொருளிடத்திலும் வேட்கை கொண்ட
மயக்கம் தோன்ற உரைத்தமை உணரப்படுகிறது.