அணியியல் - உவமையணி்

123 

     இதனை மாறன் அலங்காரம் ஒன்றுபல குழீஇய பல பொருளுவமைக்கண்
 அடக்கும், இல்பொருள் உவமையாகவும் கொள்ளும்.               - மா. அ. 101]

பல்வயின் போலியுவமை

    சொல்லிய உவமம் தொறும் தொறும் போலி புல்லப் புணர்க்கும் பல்வயின்போலி
 வருமாறு :

    "மலர்வாவி போல்வரால் மாதர்; கமல
     மலர்போலும் மாதர் வதனம்; - மலர்சூழ்
     அளிக்குலங்கள் போலும் அளகம்; அதனுள்
     களிக்கும் கயல்போலும் கண்"

 என வரும்.

     [ஒரு பாடலில் பல உபமானங்கள் சொல்லப்பட்டால் உபமானம் தோறும் உவமை
 உருபைப் புணர்த்துக் கூறுவது பலவயின் போலி உவமையாம்.

     மகளிர் தாமரைத் தடாகம் போல்வர்; அவர் முகங்கள் தாமரை போலும்; தாமரை
 மலர்களைச் சூழ்ந்த வண்டுக் கூட்டங்கள் போல்வன கூந்தல்; அம்மலர்களிடையே
 செருக்கித் திரியும் கயல் மீன்கள் போல்வன கண்கள் - என்ற இப்பாடலில் வாவி
 போல்வர், மலர் போலும், அளிக்குலங்கள் போலும், கயல் போலும் என
 உவமைதோறும்  உவமை உருபு புணர்க்கப் பட்டமை காண்க.

     இது கோவை உவமை எனவும் பெயர் பெறும்.

    "பண்டை யோர்உரை பலபொருள் தமக்குக்
     கொண்டு கூறுதல் கோவைஎன் றனரே".                - வீர. உரை. 157]