அணியியல் - உவமையணி்

125 

     [ஒரு பொருளிடத்து இல்லாத தன்மையை அதற்கு உள்ளது போல அமைத்து
 உவமை செய்வது கூடா உவமையாகும். "பைந்தொடியீர்! நும் சொற்கள் குளிர்ந்த
 சந்தனத்தில் செந்தழலும், குளிர்ந்த அமிர்தமயமான சந்திரனில் வெவ்விய விடமும
 தோன்றியமை போன்றுள்ளன. நும் கமலமுகம் கண்டு ஆசையால் தாழ்பவர் உயிருக்கு
 இவையோ அரண் செய்யும்?" - என்று பாங்கிமதி உடன்பாட்டில் தலைவன் கூறியதாக
 அமைந்த இப்பாடலில், சொற்களுக்குச் சந்தனத்தில் செந்தழலையும், சந்திரனில்
 வெவ்விடத்தையும் அமைத்து உவமையாகக் கொள்வதன்கண், கூடாததனைக்
 கூடுவதாக்கி உவமை செய்த பெற்றி காண்க.

     இது மருட்கை உவமை எனவும் பெயர்பெறும். (மா. அ. 101)

    "கூடா உவமையே கூறிய நிகர்க்கண்
     ஊடா தவைபொருட்கு உரியன எனலே".                 - தொ. வி. 337 

    "கூடா ததனைக் கூடுவ தாகக்
     கொண்டதன் ஒன்றற்கு உவமை யாக்கி
     உரைப்பது கூடா உவமை யாகும்".                   - மு. வி. பொ. 20] 

பொதுநீங்குவமை

     ஒருதலையாக உவமையை மறுத்துப் பொருளை உவமைசெய் பொதுநீங்கு உவமை
 வருமாறு :

    "திருமருவும் தண்மதிக்கும் செந்தா மரையின்
     விரைமலர்க்கும் மேலாம் தகைத்தால்; - கருநெடுங்கண்
     மானே; இருள்அளகம் சூழ்ந்தநின் வாள்முகம்,
     தானே உவமை தனக்கு"

 என வரும்.

 இது பண்பு தொழில் பயன் என்பன பற்றிப் பொருளோடு பொருள் இயையாமையின்
 வழுவாம் பிற எனின், ஆகாது; முன்னர் ஒத்தபொருளை எடுத்தோதி அவற்றினும்
 சிறந்தது இது என்ற துணை அல்லது ஒப்புமை வேண்டாமை இன்றாகலின்.