[உவமையை உட்கொண்டு, பின் உபமேயம் அதனினும் மேதக்கதாகலின் உவமையை விடுத்து, அவ்வுபமேயத்திற்கு அதனையே உபமானமாகக் கூறுவது பொதுநீங்குவமையாம். மானே! இருண்ட மயிர்முடி சூழ்ந்த நின் ஒளியுடைய முகம் அழகிய சந்திரனையும் தாமரை மலரையும் விட மேதக்கது ஆதலின், தனக்குத் தானே உவமையாம் - என்ற இப்பாடலில் பொருளையே உவமைசெய் பொதுநீங்குவமை காண்க.
இஃது ஒப்பில் உவமை எனவும் பெயர் பெறும்.- வீர. 159
இதனை இயைபின்மையணி எனத் தனி அணியாகவும் சந்திரலோகம் கூறும். வடநூலார் இதனை அநந்வயாலங்காரம் என்பர்.
"உவமையைக் கூறி ஒதுக்கிப் பொருளை,
உவமை யாக்கி உரைப்பது பொதுநீங்கு
உவமை என்மனார் உணர்ந்திசி னோரே" - மு. வி. பொ. 21
"அல்பொருள் புனைவுளி யாகஓர் பொருளையே
உரைப்பது பொதுநீங்கு உவமை என்ப" - ச. 8]
மாலை உவமை
ஒருபொருட்கு உவமை ஒருங்குவரின் அவை வரு தொடர்பாய் இறூஉம் மாலை உவமை வருமாறு :
"மலையத்து மாதவனே போன்றும், அவன்பால்
அலைகடலே போன்றும், அதனுள் - குலவு
நிலவயல மேபோன்றும், நேரியன்பால் நிற்கும்
சிலைகெழுதோள் வேந்தர் திரு"
என வரும்.
[ஒரு பொருளுக்கு அமையும் உவமைகள் ஒன்றோடொன்று தொடர்புடைமை தோன்ற அமைப்பது மாலை உவமையாம். |
|
|