132

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     நீர் போன்ற இனிய சாயலை உடைய கடம்பைநகர் மன்னனாகிய மாறனுடைய
 கைகளைப் போலக் கொடை பொழியும் கார்மேகம், அவன் கைகள் தானம்
 வழங்குதலால் உள்ளே நீர் புலராது இருக்கும் தன்மைபெற்றுக் கொடுத்தலால்
 எப்பொழுதும் மேலாகவே இருந்து இயற்கை வனப்பால் சிவந்து காணப்படுவது போல,
 உள்ளே நீரை உடைத்தாய் வானவெளியில் சென்று கருமை நிறத்தோடு
 காணப்படுகிறது - என இப்பாடலில், சிலேடைப் பொருளால் மாறன் கரத்திற்குக்
 கார்மேகம் ஒப்புமை யாகக் கற்பனை செய்யப்பட்டிருத்தல் காண்க. உணர்ச்சியற்ற
 மேகத்திற்கு உண்ணீர்மை தாங்குதல், உயர்ந்த நெறி ஒழுகுதல், வெண்ணீர்மை இன்றி
 விளங்குதல் என்பன தற்குறிப்பேற்றத்தால் கொள்ளப்பட்டவை.

     இது நோக்குவமை எனவும் பெயர்பெறும்.

    "சாலும் பொருட்கெதிர் பொருவெனும் பொருள்மொழி
     நூலோர் நோக்குதல் நோக்குஎனப் படுமே.            - வீர. உரை. 156] 

 விலக்கு உவமை வருமாறு :

     "குழைபொருது நீண்டு, குமிழ்மேல் மறியா,
     உழைபொருதுஎன் உள்ளம் கவரா, - மழைபோல்
     தருநெடுங்கைச் சென்னித் தமிழ்நாடு அனையார்
     கருநெடுங்கண் போலும் கயல்"

 என வரும்.

     கயல் மேல் செல்லுங்கால், குழை - சேறு; குமிழ் - நீர்க்குமிழி; உழை - பக்கம்
 கண்ணின்மேல் செல்லுங்கால், குழை - காதுஇடுபணி, குமிழ் - குமிழம்பூப் போலும்
 நாசி; உழை - மான்.

     [உபமானமான பொருளுக்கு உபமேயத்துக்கு உரியதன்மை இல்லை என்று கூறி,
 உபமானத்தைக் குறிப்பாக விலக்குதல் விலக்கு உவமையாகும்.