"அடைமறை ஆயஇதழ்ப் போதுபோல் கொண்ட
குடைநிழல் தோன்றும்நின் செம்மலைக் காணூஉ" - கலி. 84
எனவும், முதற்பொருளோடு சினைப்பொருளும் சினைப் பொருளோடு முதற்பொருளும் தம்முள் மயங்க உவமிப் பினும் அவை தத்தம் உவமேயங்களைச சிறப்பித்து வந்தமையான் வழுவாகாது இலக்கணமாம் எனவும்,
[நெருப்பைஒத்த சிறிய கண்களைஉடைய - என்ற தொடரில், நெருப்பாகிய முதல் கண்களாகிய சினைக்கு உவமை ஆயிற்று. இலையால் மறைக்கப்பட்ட அழகிய இதழ்களை உடைய தாமரை மலர்போலக் குடைநிழலில் காணப்படும் நின்மகனைக்கண்டு - என்ற தொடரில், இலை என்ற சினையும் மலர் என்ற சினையும் முறையே குடை, சிறுவன் என்ற முதற்பொருள்களுக்கு உவமங்கள் ஆயின.
"முதலும் சினையும்என்று ஆயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய" - தொல் பொ. 281
என்பது உவமம்பற்றிய மரபு ஆதலின், உவமத்தின்கண் முதல்வினை பற்றிய மயக்கம் கொள்ளப்படும் என்பது.]
"கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே" - சீவக. 53
எனவும்,
"மல்லல் மலைஅனைய மாதவரை வைதுஉரைக்கும்" - சீவக. 2789
எனவும், உயர்திணையோடு அஃறிணையும் அஃறிணை யோடு உயர்திணையும் மயங்க உவமிப்பினும் அவை தத்தம் உவமேயங்களைச் சிறப்பித்து வத்தமையான் வழுவாகாது இலக்கணம்ஆம் எனவும்,
[நெற்பயிர் கல்வி நிரம்பிய சான்றேர்களைப் போலத் தலைவணங்கிக் காய்த்தது என்ற தொடரில், சான்றோராகிய உயர்திணைப்பொருள் நெற்பயிராகிய அஃறிணைப் பொருளுக்கு உவமை ஆயிற்று. |
|
|