அணியியல் - உவமையணி்

139 

     வளம் மிக்க மலையைப்போன்ற அளக்கலாகா அளவும் பெருமையும் துளக்கலாகா
 நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம்தரும் வண்மையும் உடைய மாதவர்கள் -
 என்ற தொடரில் மலை என்ற அஃறிணைப்பொருள் மாதவர் என்ற உயர்திணைப்
 பொருளுக்கு உவமை ஆயிற்று;

    "உருவக உவமையில் திணைசினை முதல்கள்
     பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே"                    - நன். 410 

 என்பது ஓத்து ஆகலான்.]

    "கலம்கவிழ்த்த நாய்கன்போல் களைதுணை பிறிதுஇன்றிப்
     புலம்பும்என் நிலைகண்டும் போகலனே என்றியால்"

 எனவும்,

    "களவுஉடன் படுநரின் கவிழ்ந்து நிலம்கிளையா
     நாணி நின்றோள் நிலைகண்டு"                            - அகநா. 16 

 எனவும், ஆண்பாலோடு பெண்பாலும், உயர்திணைப் பன்மை பாலோடு அத்திணை
 ஒருமைப்பாலும் மயங்க உவமிப்பினும் அவை தத்தம் உவமேயங்களைச சிறப்பித்து
 வந்தமையால் வழுவாகாது இலக்கணம்ஆம் எனவும் கொள்க.

  உவமேய அடைக்கு உபமான அடை குறையப் புணர்ப்பினும் பயப்பாடு உடைத்தாய
 வந்தன வந்துழிக் காண்க.

     [தான் சென்ற மரக்கலம் கவிழ்ந்துவிட்டதனால் தான் மாத்திரம் உயிர்
  உய்ந்துபோன மீகாமனைப்போலத் தன் துயரத்தைக் களைவார் பிறர் இன்றித்
 தனிப்படர் உழந்து வருந்தும் தலைவியாகிய என் நிலைமையைக் கண்ணால் கண்டு
 வைத்தும், "உன்னைப் பிரிந்து செல்லேன் என்று கூறாமல் இருக்கிறாயே" - என்ற
 பகுதியில் நாய்கன் என்ற ஆண்பாற் பொருள் தலைவியாகிய பெண்பாற் பொருளுக்கு
 உவமை ஆயிற்று.