அணியியல் - உவமையணி்

141 

     [கண்கள் தடுமாறிப் பிறழ, சிவந்தவாயின் வனப்பு வெளிப்பட ஓவியத்திலும் தீட்ட
 ஒண்ணாத வனப்பினளாகிய இப்பெண்ணின் அழகிய முகத்தை, கெண்டைகள் தம்மீது
 உகள நறிய சிவந்த இதழ்கள் விளங்க வண்டுகள் சூழும் செய்தாமரை நிகர்க்கும் -
 என்ற இப்பாடலில் உபமானம் முகம்; உபமேயம் தாமரை; உபமானத்துக்கு நாட்டம்
 தடுமாறுதலும், செவ்வாய் நலம் திகழ்தலும் அடை; உபமேயத்திற்குக் கெண்டை
 மீதாடலும், நறுஞ்சேயிதழ் கிளர்தலும், வண்டு சூழ்தலும் அடை. உபமேய அடைக்கு
 உபமான அடைகள் இப்பாடலில் குறைவாக இருப்பதனால் இங்ஙனம் புணர்ப்பது வழு
 எனப்பட்டது.]

    "மன்னவர்க்கு நாய்போல் வனப்புஉடையர் வாள்வயவர்;
     மின்மினியும் வெஞ்சுடரோன் போல்விளங்கும்; - அன்னப்
     பெடைபோலும் சந்திரன்; பைந்தடங்கள் போலும்;
     மிடைமாசுஒன்று இல்லா விசும்பு"

 இதனுள் இறப்ப இழிந்த நாயோடும் தடத்தோடும் இறப்ப உயர்ந்த சுடரோனோடும்
 அன்னப்பெடை ஆகிய பெண்பாலோடும் முறையே உயர்ந்த வயவரையும் விசும்
 பினையும இழிந்த மின்மினியையும் ஆண்பாலாகிய சந்திரனையும் உவமித்ததனால்
 வருவது ஒருபயப்பாடு இன்மையின் வழுவாம் எனவும் கொள்க.

    "பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்
     வழிமருங்கு அறியத் தோன்றும் என்ப"                - தொ. பொ. 294 

 என்ப ஆகலின், இங்ஙனம் பெருமைபற்றியும் சிறுமை பற்றியும் உவமிக்குங்கால்,
 நகைமுதலிய மெய்ப்பாடு எட்டும் பற்றித் தோன்றுதல் கொள்க.

     [பெருமைபற்றியும் சிறுமைபற்றியும் உவமிக்குங்கால் மெய்ப்பாடு தோன்றச்
 செய்தலே ஏற்றது. வாளா இறப்ப உயர்ந்த பொருளையும் இறப்ப இழிந்த பொருளையும்
 உவமித்தல் வழு என்பது விளக்கப்பட்டது.]