"வையம் தகளியா, வார்கடலே நெய்யாக.
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர்ஆழி யான்அடிக்கே சூட்டுவன் சொல்மாலே,
இடர்ஆழி நீங்குகவே என்று"
என வரும்.
[ஒரே பாடலில் சில உருவகங்களை விரித்தும், சில உருவகங்களைத் தொகுத்தும் பாடுவது தொகைவிரி உருவகமாம்.
உலகத்தை அகலாகவும், கடல்நீரையே நெய்யாகவும், கதிரவனையே ஒளிப்பிழம்பாகவும் கொண்டு, இடர்க்கடல் நீங்குக என்று சொல்மாலையை ஆழியான் அடிக்கண் சூட்டுவன் - என்ற இப்பாசுரத்தில், வையம் தகளியா - கடலே நெய்யாக- சுடரோன் விளக்காக - என்ற விரிஉருவகங்களும், சொல்மாலை - இடர்ஆழி என்ற தொகைஉருவகங்களும் அமைந்துள்ளமை காண்க.
"தொகையும் விரியும் தொக்குடன் கிளப்பது
தொகைவிரி் என்று சொல்லினர் புலவர்". - வீ. உரை. 160
"தொக்கும் விரிந்தும் நற்பது தொகைவிரி". - மு. வீ. பொ. 25]
இயைபுருவகம்
பலபொருள் உருவகப் படுப்பின் அப்பலவும் இயைவன புணர்க்கும் இயைபு உருவகம் வருமாறு:
"செவ்வாய்த் தளிரும், நகைமுகிழும், கண்மலரும்,
மைவார் அளக மதுகரமும், - செவ்வி
உடைத்தாம் திருமுகம்என் உள்ளத்து வைத்தார்,
துடைத்தாரே அன்றோ துயர்"
என வரும். இதனுள் தளிர் முதலியன தம்முள் இயைபு உடைமையின் இப்பெயர்த்து ஆயிற்று.
[உருவகம் செய்யப்பட்ட பொருள்கள் பலவும் ஒன்றற்கு ஒன்று இயைபுடையதாக அமைப்பது இயைபு உருவகமாம். 21-22 |
|
|