வாய்த்தளிரும், புன்முறுவலாகிய மொட்டும், கண்களாகிய மலரும், கூந்தலாகிய வண்டும் ஆகிய இவற்றை அழகிய முகத்துக் கொண்ட தலைவி என் மனத்துயரைத தீர்த்தாள் - என்ற இப்பாடலில், தளிர், மொட்டு, மலர், வண்டு என்று ஒன்றோடொன்று இயைபுடைய பொருள்கள் உருவகம் செய்யப்பட்டமை இயைபு உருவகமாகும்.
"அசைவில் கருவி யவற்றால் தொழிலில்
இசையும் என்பது இயைபுஉரு வகமே". - வீ. உரை. 160
"உருவகம் பலபொரு ளையும்உஞற் றுங்கால்
தம்முள் இயைபுடைத் தாக உருவகம்
செய்வது இயைபுஎனச் செப்பினர் புலவர்". - மு. வீ. பொ. 26]
இயைபிலுருவகம்
வேட்டன உருவகம் வேறுவேறு இயற்றி ஈட்டுதல் புரிந்த இயைபுஇல் உருவகம் வருமாறு :
"தேன்நக்கு அலர்கொன்றை பொன்னாகச் செஞ்சடையே
கூனல் பவளக் கொடியாகத் - தானம்
மழையாகக் கோடு மதியாகத் தோன்றும்,
புழையார் தடக்கைப் பொருப்பு"
என வரும்.
[உருவகம் செய்யப்பட்ட பொருள்கள் ஒன்றோடொன்று பொருள்இயைபு இல்லையாம்படி அமைப்பது இயைபுஇல் உருவகமாகும்.
துதிக்கையை உடைய யானைனயாகிய மலை (விநாயகர்) கொன்றைமலர் பொன்னாகவும், சிவந்த சடையே பலளக்கொடியாகவும், மதநீர் மழையாகவும், கொம்பு பிறைமதியாகவும் காட்சி வழங்குகிறது - என்ற இப்பாடலில், உருவகம் செய்யப்பட்ட பொன், பவளக்கொடி, மழை, பிறை, மலை என்ற இவற்றினிடையே பொருள் இயைபு இன்மை காணப்படுகிறது. |
|
|